அமெரிக்க வான்வெளியில் உளவு பார்க்க வந்ததாகக் கூறி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (UFO) ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. சுமார் 5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக 4 கோடி ரூபாய்க்கும் மேல்) மதிப்புள்ள அதிநவீன ஏவுகணையைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இந்த அதிரடி உத்தரவை நிறைவேற்றியது. ஆனால், தற்போது நடத்தப்பட்ட ஆழமான விசாரணையில், அந்தப் பொருள் வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலமோ அல்லது எதிரி நாட்டின் உளவு சாதனமோ அல்ல என்ற அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது.
அதிநவீன எஃப்-22 ரேப்டர் (F-22 Raptor) போர் விமானத்திலிருந்து வீசப்பட்ட ‘சைடுவிண்டர்’ (AIM-9X Sidewinder) ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்ட அந்த மர்மப் பொருள், உண்மையில் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த அமெச்சூர் பொழுதுபோக்கு கிளப் (Northern Illinois Bottlecap Balloon Brigade) ஒன்றால் பறக்கவிடப்பட்ட ஒரு சாதாரண பலூன் ஆகும். வெறும் 12 டாலர் (சுமார் 1,000 ரூபாய்) மட்டுமே மதிப்புள்ள இந்த சிறிய ‘பிகோ’ (Pico Balloon) பலூனைத் தான், ஏதோ உலகிற்கே ஆபத்து வந்துவிட்டது போல அமெரிக்க அரசு மிக விலையுயர்ந்த ஏவுகணையை வீசி அழித்துள்ளது.
சீனாவின் பிரம்மாண்ட உளவு பலூன் அமெரிக்க வான்வெளியில் நுழைந்து பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய சில நாட்களிலேயே இந்த விசித்திரச் சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதனால் உஷாரான அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, தனது ரேடார் அமைப்புகளின் கண்காணிப்புத் திறனை அதிகரித்தபோது, வான்வெளியில் மிக மெதுவாக நகர்ந்த இந்தச் சிறிய பொழுதுபோக்கு பலூன் அவர்களின் கண்ணில் சிக்கியுள்ளது. சிவிலியன் விமானப் போக்குவரத்திற்கு இது ஆபத்தாக முடியும் என்று கருதி, ஜோ பைடன் நிர்வாகம் உடனடியாக அதைச் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் பின்னர் ஒப்புக்கொண்டன.
வெறும் 12 டாலர் மதிப்புள்ள, வானிலை மற்றும் காற்றின் திசையை அறிய மாணவர்கள் பயன்படுத்தும் ஒரு எளிய அறிவியல் பலூனை அழிக்க, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களைப் பயன்படுத்திய அமெரிக்க அரசின் இந்த அவசர முடிவு சர்வதேச அளவில் பெரும் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திலும், சமூக வலைதளங்களிலும் எதிர்க்கட்சியினர் பைடன் நிர்வாகத்தின் இந்த ‘அதிவேக’ நடவடிக்கையை “அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பட்ஜெட் விரயம்” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.