Posted in

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் அபாயம் அதிகரிப்பு: சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற உத்தரவு!

ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் மீது தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு வாஷிங்டன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்தான், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவில் உள்கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் மற்றும் பாதுகாப்புச் சவால்களைச் சமாளிக்கும் வகையில் இந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு எப்போதுமே முதலிடம் அளிக்கப்படும் என்றும், இப்பகுதியில் உள்ள நிலைமைகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த திடீர் உத்தரவு சர்வதேச அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்தத் சர்வதேச நாடுகள் பல்வேறு ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.