அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் முக்கியப் பாதையாக விளங்கும் ‘ஹோர்முஸ் நீர்ச்சந்தி’ (Strait of Hormuz) பகுதியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஈரான் மீதான தனது இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் கடலோர கண்காணிப்புப் பகுதிகளை இலக்கு வைத்து அடுத்தடுத்து குண்டுமழை பொழிந்து வருகிறது.
சமீபத்தில் சைப்பிரஸ் நாட்டைச் சேர்ந்த வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஹோர்முஸ் நீர்ச்சந்திப் பாதை தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் இராணுவம் (IRGC) அறிவித்தது. ஆனால், ஈரானின் இந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளையும், வழித்தடக் கெடுபிடிகளையும் கடுமையாக எதிர்த்த அமெரிக்கா, இந்த சர்வதேச நீர்வழிப்பாதை எப்போதும்போல திறந்தே இருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. மேலும், “ஒரே இரவில் நாங்கள் ஈரானை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளோம், சர்வதேசக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானியப் படைகளின் பலத்தை ஒடுக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் இராணுவம் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்காகக் கொண்டு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. கத்தார், ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கக் கூட்டுப் படைத் தளங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது ஈரானிய ஏவுகணைகள் பாய்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களின் இறையாண்மையைக் காக்கவும், ஹோர்முஸ் நீர்ச்சந்தியை நிர்வகிக்கும் தங்களின் உரிமையை நிலைநாட்டவும் அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளத் தயார் என்று ஈரானின் வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம், இந்தத் தொடர் மோதல்களால் தற்போது முற்றிலும் சிதைந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உலகளவில் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹோர்முஸ் நீர்ச்சந்தி வழியாகவே கடந்து செல்கிறது. இதனால், தற்போதைய அமெரிக்க – ஈரான் போர் பதற்றம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டையும், சர்வதேசப் சந்தையில் கடும் பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கும் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.