திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் மடத்தின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது, தற்போது மேலும் ஒரு நிலமோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே ஆய்க்குடி பகுதியில் உள்ள தனியார் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பதிவு செய்து கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, காவல்துறையில் புதிய புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் வாயிலாக முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் சிபிசிஐடி (CB-CID) விசாரணை நடத்தி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்தச் சூழலில், தற்போது பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் நடைபெற்ற அடுத்தடுத்த பத்திரப்பதிவு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
தற்போது புதிதாக எழுந்துள்ள புகாரில், பழனி அருகே ஆய்க்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் தொடர்புடைய நிலத்தை விற்ற மணி, நிலத்தை வாங்கிய கந்தசாமி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்து பத்திரப்பதிவு செய்து கொடுத்த முன்னாள் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய மூவர் மீது தற்போதைய பழனி சார்பதிவாளர் ஈஸ்வரி காவல்நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
சார்பதிவாளர் ஈஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, நிலத்தை விற்ற மணி மற்றும் வாங்கிய கந்தசாமி ஆகியோரிடம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே பழனி கோவில் நில மோசடியில் சிக்கி நீதிமன்றக் காவலில் உள்ள ஜஸ்டின் மணிகண்டன் மீது, அடுத்தடுத்து புதிய நிலமோசடி வழக்குகள் பாயத் தொடங்கியுள்ளது பத்திரப்பதிவுத்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.