மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கிட் ஜலீல் மைதானம், வரும் டிசம்பர் 27-ம் தேதி ஒரு மாபெரும் 'ரசிகர் சுனாமியை' சந்திக்கக் காத்திருக்கிறது. நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவிற்குச் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மலேசியக் காவல்துறையினர் தற்போது பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர். அந்நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்களது ஆடம்பரக் கார்களில் விஜய் மற்றும் தவெக (TVK) கொடிகளை ஏந்தி வலம் வருவது, மலேசியப் பாதுகாப்புப் படையினரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அவர்களை ஒருவித அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மலேசியக் காவல்துறையினர் விஜய்யின் பின்னணி குறித்து ஆய்வு செய்தபோது, அவருக்கு இருக்கும் பிரம்மாண்டமான அரசியல் செல்வாக்கு மற்றும் ரசிகர் பட்டாளத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனம் இந்த விழாவிற்கு சட்டப்பூர்வமாக அனுமதி பெற்றுவிட்டதால், இப்போது அதனை ரத்து செய்யவும் முடியாது. அப்படிச் செய்தால், ஒரு லட்சம் மக்களைக் கட்டுப்படுத்தும் திறன் தங்களுக்கு இல்லை என்ற அவப்பெயர் ஏற்படும் என்பதால், "தலையில் துண்டு போடும்" நிலைக்கு மலேசிய போலீஸார் தள்ளப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புச் சிக்கல்களுக்கு மத்தியில் மற்றொரு பெரும் சவாலாக இருப்பது விஜய்யின் அரசியல் பேச்சு. ஒருவேளை இந்திய மத்திய அரசை விஜய் தனது மேடைப் பேச்சில் கடுமையாகத் தாக்கினால், அது இந்தியா மற்றும் மலேசியா இடையேயான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாகப் பேசுவதற்கு மலேசியக் காவல்துறை தற்போது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. தனது கடைசித் திரைப்படம் என்பதால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தனது அரசியல் எதிரிகளுக்குப் "பதிலடி" கொடுப்பாரா அல்லது மலேசிய போலீஸாரின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவாரா என்பதுதான் தற்போதைய மில்லியன டாலர் கேள்வியாக உள்ளது. எது எப்படியோ, டிசம்பர் 27 அன்று மலேசியாவில் ஒரு 'வரலாறு' எழுதப்படப் போவது மட்டும் உறுதி.
