நடிகர் விஜய் திரையுலகிலிருந்து விலகும் முன் நடித்துள்ள கடைசிப் படமான 'ஜனநாயகன்', வரும் ஜனவரி 9-ம் தேதி உலக நாடுகள் எங்கும் மிக பிரம்மாண்டமாகத் திரையிடப்பட உள்ளது. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், லண்டன், ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துள்ளன (Sold Out).
மற்ற திரையரங்குகளில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் முடிந்துள்ளன. டிக்கெட் விலையைப் பொறுத்தவரை, லண்டனில் ஒரு சாதாரண டிக்கெட்டின் விலை 17 பவுண்டுகளாக (சுமார் 1,840 இந்திய ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே பிரான்ஸ் நாட்டில் 20 யூரோக்களும், அமெரிக்காவில் 22.50 டாலர்களும் வசூலிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் ஜனவரி 9 (வெள்ளிக்கிழமை) ஒரு வேலை நாளாக இருந்தபோதிலும், காலை 10 மணி காட்சிக்கே டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது விஜய் அவர்களின் அசைக்க முடியாத உலகளாவிய செல்வாக்கைக் காட்டுகிறது. வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு சுவாரசியமான தகவலாக, 'ஜனநாயகன்' திரைப்படம் சீன மொழியிலும் டப் செய்யப்பட்டு வருவதாகவும், கொரிய மொழியில் ஏற்கனவே டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சர்வதேசச் சந்தையிலும் இப்படம் பெரும் சாதனையைப் படைக்கும் எனத் தெரிகிறது. மொத்தத்தில், வரப்போகும் பொங்கல் பண்டிகை விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு உலகளாவிய 'போக்கிரிப் பொங்கலாகவே' அமையப் போகிறது.
