ஸ்பெயினின் தெற்குப் பகுதிகளில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக வரலாறு காணாத திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலாகா (Malaga) மற்றும் கிரனாடா (Granada) ஆகிய மாகாணங்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் இயற்கைச் சீற்றத்தில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 300-க்கும் மேற்பட்ட அவசரக்கால மீட்பு அழைப்புகள் வந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மலாகா மாகாணத்தில் உள்ள கார்டமா (Cártama) போன்ற நகரங்கள் வெள்ளத்தால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
மாயமானவர்களைத் தேடும் பணியில் ஸ்பெயின் சிவில் கார்டு (Civil Guard) மற்றும் அவசரக்கால மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் வேளையில், வானிலை ஆய்வு மையம் இந்தப் பகுதிகளுக்கு முதலில் விடுத்திருந்த 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) தற்போது 'ஆரஞ்சு எச்சரிக்கையாக' குறைக்கப்பட்டுள்ளது. எனினும், கடற்கரையோரப் பகுதிகளில் இன்னும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 2024 அக்டோபரில் வேலன்சியா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரத்திலிருந்து ஸ்பெயின் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் ஒரு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றோரப் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
