ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, அதன் முக்கிய செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கொல்லப்பட்டதை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை ஹமாஸின் புதிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டார். அவரும் தனது முன்னோடியைப் போலவே முகமூடி அணிந்து, 'அபு ஒபைடா' என்ற அதே புனைப்பெயரிலேயே உரையாற்றினார். அபு ஒபைடாவுடன் சேர்த்து, ஹமாஸின் ராணுவத் தளபதி முகமது சின்வார் (Mohammed Sinwar), ரஃபா படைப்பிரிவின் தலைவர் முகமது ஷபானா மற்றும் பல மூத்த தளபதிகளும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
சுமார் இரண்டு தசாப்தங்களாக ஹமாஸின் முகமாகத் திகழ்ந்த அபு ஒபைடா, 2006-ல் இஸ்ரேலிய வீரர் கிலாத் ஷாலித் கடத்தப்பட்டதை அறிவித்தபோது உலகளவில் பிரபலமானார்.
இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் போர்நிறுத்தம் குறித்து ஆலோசிக்கவுள்ள சூழலில் வெளியாகியுள்ளது. ஹமாஸின் முக்கியப் பொறுப்புகளை வகித்த தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு வருவதால், அந்த அமைப்பின் தலைமை மற்றும் களச் செயல்பாடுகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஹமாஸ் தனது போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளது.
