இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் நாடுகளின் பல விமான சேவைகள் நிறுத்தி வைப்பு. இதனால் பல விமானங்கள் பயணங்களை கேன்சல் செய்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக மக்கள் தயாராகி வரும் வேளையில், அங்குள்ள முக்கிய விமான நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில் உள்ள விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள், லக்கேஜ் கையாளுபவர்கள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிச்சூழலை மேம்படுத்தக் கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தவித்து வரும் சூழல் உருவாகியுள்ளது.
ஸ்பெயினில் ரியான்ஏர் (Ryanair) நிறுவனத்தின் தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் வாரத்தின் பல நாட்களில் வேலைநிறுத்தம் செய்வதால், மாட்ரிட் மற்றும் பார்சிலோனா போன்ற முக்கிய நகரங்களில் லக்கேஜ்களைப் பெறுவதில் பல மணிநேர தாமதம் ஏற்படுகிறது. இத்தாலியில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் (Air Traffic Control) திடீர் வெளிநடப்பு காரணமாக, ரோம் மற்றும் மிலன் நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போர்ச்சுகலில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லண்டன் ஹீத்ரோ (Heathrow) மற்றும் லூட்டன் (Luton) விமான நிலையங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. குறிப்பாக ஈஸிஜெட் (EasyJet) மற்றும் ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் (SAS) ஊழியர்களின் போராட்டத்தால், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காகச் சொந்த ஊர் செல்லவிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான நிலைய ஊழியர்கள் பற்றாக்குறையால் செக்-இன் மற்றும் செக்யூரிட்டி சோதனைகளுக்குப் பல கிலோமீட்டர் தூரத்திற்குப் பயணிகள் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது விடுமுறைக் காலத்தின் மகிழ்ச்சியைக் குலைக்கும் வகையில் "டிராவல் கயாஸ்" (Travel Chaos) ஆக மாறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அங்கிருந்து இந்தியா வரத் திட்டமிட்டுள்ளவர்கள், விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் தங்களது விமானத்தின் நிலையை (Flight Status) இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக லக்கேஜ்களைக் கொண்டு செல்வதைக் குறைத்துக்கொண்டு 'ஹேண்ட் பேக்' (Hand Luggage) மட்டும் எடுத்துச் செல்வது தாமதத்தைத் தவிர்க்க உதவும் எனப் பயண ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்களது விமானம் ரத்து செய்யப்பட்டால் அதற்கான இழப்பீடு (EU261 Compensation) குறித்து முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
