அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி நேஷனல் கார்டு (தேசிய பாதுகாப்புப் படை) வீரர்களைக் குவிக்க முயன்ற டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி முட்டுக்கட்டை போட்டுள்ளது.
பொதுவாக இயற்கை பேரிடர்கள் அல்லது மிகப்பெரிய கலவரங்களின் போது மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த மாநில பாதுகாப்புப் படையை, கூட்டாட்சி அரசு தன்னிச்சையாகப் பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டிரம்பின் இந்த அதிரடி நகர்வை முறியடித்திருப்பது, அமெரிக்க ஜனநாயகத்திற்கும் இல்லினாய்ஸ் மாநிலத்திற்கும் கிடைத்த ஒரு பெரிய வெற்றி என அம்மாநில கவர்னர் ஜே.பி. பிரிட்ஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்கவும், குற்றங்களைக் குறைக்கவும் தனது துருப்புக்களை அனுப்புவது அவசியம் என்று டிரம்ப் வாதிட்டார். குறிப்பாக டெமாக்ரடிக் கட்சி ஆளும் நகரங்களான சிகாகோ, போர்ட்லேண்ட் மற்றும் வாஷிங்டன் டிசி போன்ற இடங்களில் தனது செல்வாக்கை நிலைநாட்ட அவர் முயன்றார். இருப்பினும், சிகாகோவில் நடக்கும் போராட்டங்கள் அமெரிக்காவிற்கு எதிரான "கிளர்ச்சி" (Rebellion) என்று சொல்ல முடியாது என கீழ நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றமும் அந்தத் தடையை நீக்க மறுத்துவிட்டது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பழமைவாத நீதிபதிகள் பெரும்பான்மையாக இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் அவர்கள் டிரம்ப் நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 6-3 என்ற கணக்கில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், "இல்லினாய்ஸ் மாநிலத்தில் ராணுவத்தை வைத்து சட்டத்தை அமல்படுத்த அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். கிளாரன்ஸ் தாமஸ் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் மட்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டிரம்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தத் தீர்ப்பு அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சிகாகோவில் நிலவும் தற்போதைய சூழலை அப்படியே தக்கவைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக டிரம்ப் பல்வேறு நகரங்களில் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியிலும் வீரர்களைக் குவித்து வந்த நிலையில், முதல்முறையாக உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு ஒரு தீர்க்கமான முடிவை அறிவித்துள்ளது. இது வெள்ளை மாளிகைக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அதிபர் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பதிலும் வெளியாகவில்லை.
