நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் (Niger State) உள்ள ஒரு கிராமப்புறச் சந்தையில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 3, 2026) மாலை நேரத்தில், ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று கிராமத்திற்குள் புகுந்து மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நைஜர் மாநிலத்தின் 'போர்கு' (Borgu) பகுதியில் உள்ள கசுவான்-டாஜி (Kasuwan-Daji) கிராமத்தில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அங்குள்ள உள்ளூர் சந்தையில் மக்கள் கூட்டமாக இருந்த நேரத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுததாரிகள் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினர். துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமின்றி, அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளையும் அவர்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்ததுடன், குழந்தைகள் உட்படப் ஏராளமானோர் கடத்தப்பட்டதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை தரப்பில் 30 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டாலும், பலியானவர்களின் எண்ணிக்கை 40-க்கும் அதிகமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் மற்றும் தேவாலய நிர்வாகிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். பல உடல்கள் இன்னும் கிராமத்திலேயே கிடப்பதாகவும், பாதுகாப்புப் படையினர் வராததால் அவற்றை மீட்கச் செல்லவே மக்கள் அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலின் போது, எந்தவிதமான பாதுகாப்பு உதவியும் கிடைக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.
நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் இத்தகைய ஆயுதக் கும்பல்களின் (Bandits) அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் இதே பகுதிக்கு அருகில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதிகளை மறைவிடமாகப் பயன்படுத்தும் இக்கும்பல்கள், கிராமங்களைக் கொள்ளையடிப்பதையும், பணத்திற்காக மக்களைக் கடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்தச் சம்பவம் அந்நாட்டின் பாதுகாப்புப் பலவீனத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
