வெளிநாடுகளில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தீர்க்க முடியாத வழக்குகளை மூடுவதே இல்லை. இதற்கு சிறந்த ஒரு உதாரணம் தான் இந்த வழக்கு. 60 ஆண்டுகள் ஆகியும் மூடாமல் இருந்த இந்த கொலையை எப்படி கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று பார்த்தால். உண்மையில் ஆச்சரியாமான ஒரு விடையம் தான்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1965-ஆம் ஆண்டு மாயமான 19 வயது இளைஞன் ரொனால்ட் ஜோசப் கோல் (Ronald Joseph Cole) என்பவரின் மர்மம், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 2,000 மைல்கள் தொலைவில் உள்ள இல்லினாய்ஸ் (Illinois) பகுதியில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்த அவரது மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்த இந்த 'Cold Case' தற்போது அதிநவீன DNA தொழில்நுட்பத்தால் ஒரு முடிவுக்கு வந்துள்ளது உலகையே அதிரவைத்துள்ளது.
ரொனால்ட் காணாமல் போனபோது அவருக்கு வயது 19. அவர் வேலை தேடி தனது உறவினர்களைச் சந்திக்கச் சென்றபோதுதான் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். ஆனால், இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அவர் காணாமல் போன 18 ஆண்டுகளுக்குப் பிறகுதான் (1983-ல்) காவல் நிலையத்திலேயே புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரொனால்டின் தம்பி டேவிட் லா ஃபெவர் (David La Fever) என்பவர்தான் இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என்று அவரது குடும்பத்தினர் ஆரம்பத்திலிருந்தே சந்தேகித்து வந்தனர். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அன்று போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
பல தசாப்தங்களாகத் தூங்கிக் கொண்டிருந்த இந்த வழக்கு 2024-ல் மீண்டும் சூடுபிடித்தது. 1966-ஆம் ஆண்டு இல்லினாய்ஸ் ஓடை அருகே கண்டெடுக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாத மண்டை ஓட்டை, 'The Doe Project' என்ற தன்னார்வ அமைப்பு கையில் எடுத்தது. அந்த மண்டை ஓட்டில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்த ஓட்டை (Bullet Hole) தெளிவாக இருந்தது. இது ஒரு கொலை (Homicide) என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், நவீன தடயவியல் ஆய்வகமான 'Astrea Forensics' உதவியுடன் சிதைந்த நிலையில் இருந்த அந்த எலும்புகளிலிருந்து DNA எடுக்கப்பட்டது.
இந்த விசாரணையில் கிடைத்த DNA மாதிரிகள், ரொனால்டின் குடும்ப உறுப்பினர்களுடன் ஒத்துப்போனதை அடுத்து, அந்த மண்டை ஓடு 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ரொனால்ட் கோல் என்பவருடையதுதான் என்பது 2025 மே மாதம் உறுதி செய்யப்பட்டது. தனது அண்ணனைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட டேவிட் லா ஃபெவர், 2007-லேயே அலாஸ்காவில் உயிரிழந்துவிட்டார். குற்றவாளி இப்போது உயிருடன் இல்லை என்றாலும், பல தசாப்தங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஒரு கொடூரக் கொலைக்கான நீதி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கலிபோர்னியாவில் மாயமான ரொனால்டின் உடல், எப்படி 2,000 மைல்கள் தாண்டி இல்லினாய்ஸ் மாகாணத்திற்கு வந்தது என்பது இன்னும் பெரிய மர்மமாகவே உள்ளது. தம்பிதான் அவரைக் கொலை செய்துவிட்டு உடலை அவ்வளவு தூரம் கொண்டு சென்று வீசினாரா? அல்லது இதற்குப் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்ற கோணத்தில் ஹென்றி கவுண்டி (Henry County) போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 60 வருடங்களுக்குப் பிறகு ரொனால்டுக்குக் கிடைத்த இந்த அடையாளம், அவரது குடும்பத்தினருக்கு ஒரு வழியில் நிம்மதியையும், மறுபுறம் பெரும் வேதனையையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

