தர்மபுரி கொடூரம்: திருந்தி வாழ நினைத்த மச்சினிச்சி உயிருடன் புதைப்பு! 7 லோடு மண்ணைக் கொட்டிய 'காமுக' மாமா சிக்கியது எப்படி?
தர்மபுரி மாவட்டம் ஒசஅள்ளி புதூர் கிராமத்தில், தனது மச்சினிச்சி ராஜேஸ்வரியை (32) உயிருடன் புதைத்துக் கொலை செய்த அக்கா கணவர் அனுமந்தன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வரும் அனுமந்தனுக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகத் தகாத உறவு இருந்து வந்துள்ளது. ராஜேஸ்வரியின் கணவர் பிரபு வேலை நிமித்தமாகப் பெங்களூருவில் தங்கியிருந்த நிலையில், இந்தத் தொடர்பு நீடித்துள்ளது. ஆனால், இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவந்ததால், தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு ராஜேஸ்வரி திருந்தி வாழ முடிவு செய்துள்ளார்.
அனுமந்தனுடனான உறவைத் துண்டித்துக்கொண்ட ராஜேஸ்வரி, அவரோடு பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தன், பலமுறை உல்லாசத்திற்கு அழைத்தும் ராஜேஸ்வரி மறுத்ததால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று, மகனின் பள்ளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ராஜேஸ்வரியைச் சந்தித்து, "கடைசியாக ஒருமுறை மட்டும் பேச வேண்டும்" என்று ஆசை வார்த்தை கூறி ஆள் நடமாட்டம் இல்லாத கல்லுகொல்லைமேடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மீண்டும் வற்புறுத்தியபோது ராஜேஸ்வரி திட்டவட்டமாக மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் உச்சத்தில், அருகிலிருந்த கல்லை எடுத்து ராஜேஸ்வரியின் தலையில் அனுமந்தன் ஓங்கிப் போட்டுள்ளார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததும், கை மற்றும் கால்களிலும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். ராஜேஸ்வரி மயக்கமடைந்ததை அடுத்து, அவர் இறந்துவிட்டதாகக் கருதிய அனுமந்தன், அருகில் இருந்த பள்ளத்தில் அவரைத் தள்ளிவிட்டுள்ளார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த டிராக்டரில் இருந்த கட்டிடக் கழிவு மண்ணை அவர் மீது கொட்டியுள்ளார். இப்படித் தொடர்ந்து ஏழு முறை டிராக்டர் லோடு மண்ணைக் கொட்டி அவரை உயிருடன் புதைத்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், மண் கொட்டப்பட்டபோது ராஜேஸ்வரி உயிருடன் இருந்ததும், மூச்சுத் திணறியே அவர் உயிரிழந்ததும் உறுதியாகியுள்ளது.
அனுமந்தனும் ராஜேஸ்வரியும் நீண்ட நேரமாகச் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்ததை அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்தவர்கள் கவனித்துள்ளனர். திடீரெனச் சத்தம் நின்றதால் சந்தேகமடைந்த அவர்கள், அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது பள்ளத்தில் மண் அரைகுறையாகக் கொட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மண்ணைத் தோண்டி ராஜேஸ்வரியின் உடலை மீட்டதோடு, பதுங்கியிருந்த அனுமந்தனைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். "பேச மறுத்ததால் கொலை செய்தேன்" என்று அனுமந்தன் அளித்த வாக்குமூலம் தர்மபுரி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
