ஸ்பெயினில் பல ஆண்டுகளாகச் சட்டவிரோதமாக வசித்து வரும் சுமார் 5 லட்சம் குடியேறிகளுக்கு (Undocumented Migrants) ஓராண்டு வசிப்பிட உரிமம் மற்றும் பணி அனுமதி வழங்கப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான இடதுசாரி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், தாங்கள் ஸ்பெயினில் குறைந்தது ஐந்து மாதங்களாக வசிப்பதையும், குற்றப்பின்னணி ஏதும் இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும். இதனால் பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதரகங்களில் தங்களது ஆவணங்களைச் சரிபார்க்க ஆயிரக்கணக்கான குடியேறிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஐரோப்பாவின் பல நாடுகள் குடியேறிகளுக்கு எதிரான கடும் கொள்கைகளை எடுத்து வரும் நிலையில், ஸ்பெயின் மட்டும் இந்த 'மனிதாபிமான' முடிவை எடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய அந்நாட்டு அமைச்சர்கள், ஸ்பெயினின் மக்கள்தொகை குறைந்து வருவதாலும், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சரிசெய்யவும் இந்த நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டு அரசுக்குச் சமூகப் பாதுகாப்பு வரி (Social Security) மூலம் ஆண்டிற்கு 1 பில்லியன் யூரோக்களுக்கு மேல் வருவாய் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு எதிராக வலதுசாரி கட்சிகள் 'இது ஒரு படையெடுப்பு' எனச் சாடி வரும் நிலையில், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) தனது 'X' தளத்தில் இத்திட்டத்தை விமர்சித்திருந்தார். "வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க இடதுசாரி அரசு செய்யும் தந்திரம் இது" என்ற பதிவிற்கு மஸ்க் "Wow" எனப் பதிலளித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஸ்பெயின் பிரதமர் சான்செஸ், "செவ்வாய் கிரகம் (Mars) நமக்காகக் காத்திருக்கலாம், ஆனால் மனிதநேயம் (Humanity) காத்திருக்க முடியாது" எனப் பதிவிட்டு மஸ்க்கின் விண்வெளி கனவைச் சூசகமாக விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே ஸ்பெயினில் சுமார் 8.4 லட்சம் குடியேறிகள் ஆவணங்களின்றி வசிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பு குடியேறிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இது பிற நாட்டு குடியேறிகளையும் ஈர்க்கும் ஒரு 'சிக்னலாக' அமைந்துவிடும் என எதிர்க்கட்சியான 'வோக்ஸ்' (Vox) எச்சரித்துள்ளது. மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ள இந்த விண்ணப்பச் செயல்முறை, ஸ்பெயினின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Elon Musk
