மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான ‘Armada’ (போர்க்கப்பல் படை) விரைந்து கொண்டிருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, அணுசக்தி மூலம் இயங்கும் USS Abraham Lincoln என்ற ராட்சத விமானம் தாங்கி போர்க்கப்பல், பல அழிவுகரமான ஏவுகணைகளை ஏந்தும் போர் கப்பல்களுடன் (Destroyers) பாரசீக வளைகுடாவை நோக்கி நகர்கிறது. இந்த ஆர்மடா படையில் அதிநவீன F-35C Lightning II போர் விமானங்கள், எதிரி நாட்டு ரேடார்களை முடக்கும் EA-18G Growler மின்னணு போர் விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான Tomahawk ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் போராட்டக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பிரிட்டனும் தன் பங்கிற்கு இந்த விவகாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) அமைப்பைச் சேர்ந்த அதிநவீன Typhoon Fighter Jets போர் விமானங்கள் கத்தார் நாட்டிலுள்ள அல் உடித் (Al Udeid) தளத்திற்கு விரைந்துள்ளன. Air-to-air refuelling எனப்படும் வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட விமானங்களுடன் சேர்ந்து, பிரிட்டிஷ் படைகள் மத்திய கிழக்கில் ஒரு தற்காப்பு அரணை (Defensive capability) உருவாக்கியுள்ளன. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க முனைந்தால், அதைத் தடுத்து நிறுத்தவும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள தளம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கவும் பிரிட்டன் இந்த Contingency support நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது ஈரானைச் சுற்றியுள்ள வான்வெளியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் ஒரு வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
ஒருவேளை அமெரிக்க ஆர்மடா தாக்குதலைத் தொடங்கினால், அது ‘Decapitation strike’ எனப்படும் தலைமைத்துவத்தை முடக்கும் தாக்குதலாக இருக்கலாம் என ராணுவ நிபுணர்கள் கணிக்கின்றனர். முதலில், சைபர் தாக்குதல்கள் மற்றும் மின்னணு போர் முறைகள் மூலம் ஈரானின் தகவல் தொடர்பு மற்றும் ரேடார்களைச் செயலிழக்கச் செய்வார்கள். பின்னர், கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் B-2 Spirit Stealth Bombers மூலம் ஈரானின் அணுமின் நிலையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் குறிவைக்கப்படும். இந்தத் தாக்குதல் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) கட்டுப்பாட்டு மையங்களைச் சிதைத்து, ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பையும் நிலைகுலையச் செய்யும் வகையில் வடிவமைக்கப்படலாம்.
இந்த ராணுவ நகர்வுகள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை (Impact) ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதால், போர் மூண்டால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உலக அளவில் விண்ணைத் தொடும். மேலும், ஈரான் தனது ஆதரவு படைகளைக் (Proxies) கொண்டு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக்கூடும். "எங்கள் விரல்கள் தூண்டுதலில் (Finger on the trigger) உள்ளன" என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளதால், ஒரு சிறு தவறு கூட உலகப் போருக்கு வழிவகுக்கும் அபாயம் நிலவுகிறது.