
"நான் இன்னும் தீயாய் வேலை செய்கிறேன்!" - விமர்சனங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த அதிரடி பதில்!
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் சேதுபதி, அர்விந்த் சுவாமி நடிப்பில் மௌனப் படமாக உருவாகியுள்ள 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் வரும் ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்ற ரஹ்மானிடம், "இனி வரும் காலங்களில் மிகக் குறைவான படங்களிலேயே பணியாற்றப் போவதாகக் கூறினீர்களே, ஏன் இந்த முடிவு?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ரஹ்மான் அளித்த பதில், அவரது இசை மீதான தீராத தாகத்தையும், காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பக்குவத்தையும் வெளிப்படுத்தியது.
ரசிகர்களின் ரசனை குறித்துப் பேசிய ரஹ்மான், "90-களின் ரசிகர்கள் இப்போதும் வந்து என்னிடம் 'ரோஜா' பாடல்கள் அற்புதமாக இருந்தது எனக் கூறுகிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்லும்போது, இப்போது நான் நல்ல இசையைக் கொடுப்பதில்லையோ என்ற எண்ணம் என் மனதில் தோன்றுகிறது. அது ஒருவிதத்தில் எனது தற்போதைய உழைப்பைக் குறைத்து மதிப்பிடுவது போல எனக்குத் தெரிகிறது. இந்தச் சிந்தனை என்னை மிகவும் பாதித்தது" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். பழைய புகழிலேயே மயங்கிக் கிடக்காமல், தற்கால தலைமுறைக்கும் தனது இசை சென்றடைய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக தான் ஒரு வெறிபிடித்தது போலத் தொடர்ச்சியாகப் பல படங்களில் பணியாற்றியதன் ரகசியத்தையும் அவர் உடைத்தார். "90-களில் நான் என்ன செய்தேன் என்பதை விட, இப்போது என்ன செய்கிறேன் என்பதுதான் முக்கியம். அதற்காகவே சமீபகாலமாகத் தீவிரமாகப் பணியாற்றினேன். இப்போது வருபவர்கள் 'மாமன்னன்', 'தக் லைஃப்' என எனது தற்போதைய படங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இதைக் கேட்கும்போது இப்போது நான் பாதுகாப்பாக உணர்கிறேன். அடுத்த தலைமுறைக்கு என்னைப் புரிய வைக்க நான் வேண்டுமென்றேதான் இந்த ஓட்டத்தில் கலந்துகொண்டேன்" என்றார்.
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வது பற்றிப் பேசிய அவர், "பழைய வழிமுறைகளையே பிடித்துக்கொண்டிருந்தால் நாம் காலாவதியாகிவிடுவோம். சிலவற்றை நாம் கற்றுக் கொள்ள வேண்டும், சில பழைய விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது தோல்வி கூட கிடைக்கலாம், அது பற்றி எனக்குக் கவலையில்லை. ஒரு மெட்டு (Tune) சிலருக்கு முதல் முறை பிடிக்கும், சிலருக்கு 11-வது முறை தான் பிடிக்கும். ஒரு குழுவாக இணைந்து எது சிறந்தது என்பதைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்" எனத் தனது பணி முறையை விளக்கினார்.
ஏன் இப்போது குறைவான படங்களில் கமிட் ஆகிறார் என்ற கேள்விக்குத் பதிலளிக்கையில், "தற்போது 'ராமாயண்' போன்ற மிகப் பிரம்மாண்டமான படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அதுபோக எனது 'Secret Mountain' எனும் மெட்டா பேண்ட் (Meta Band) பணிகள், இம்தியாஸ் அலி மற்றும் மணிரத்னம் ஆகியோரின் படங்கள் எனப் பெரிய திட்டங்கள் கையில் உள்ளன. தரமான இசையைக் கொடுக்க நேரம் தேவைப்படுகிறது, இதை விட வேறென்ன வேண்டும்?" எனக் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
Tags
Cinema News