
"அடுத்த தையில் அ.தி.மு.க ஆட்சி!" - மேட்டூரில் கர்ஜித்த எடப்பாடியார்! மெகா கூட்டணியால் திணறும் தி.மு.க!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்; அதேபோல் வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். மக்கள் அனைவரும் இந்த திறமையற்ற திமுக ஆட்சி எப்போது முடியும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பொங்கலை அதிமுக ஆளுங்கட்சியாக இருந்து கொண்டாடும்" என அவர் சபதமேற்றுள்ளார்.
இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து விவசாயிகளுடன் பொங்கல் வைத்துத் தனது அரசியல் பலத்தைக் காட்டினார். அவரது உரையின் முக்கிய அம்சமாக அமைந்தது 'கூட்டணி' குறித்த அறிவிப்பு. "அதிமுக தலைமையில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு வலிமையான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணியை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது" என்று அவர் அறிவித்துள்ளார். குறிப்பாக, பாமகவில் நிலவிய உட்கட்சி மோதலுக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் இணைந்திருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், "இன்று தமிழகம் போதைப்பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டது. ஒரு முழுநேர டிஜிபியை கூட நியமிக்க முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது. ஒரு பொறுப்பு டிஜிபி மாற்றப்பட்டு, மற்றொரு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படும் அவலநிலை நீடிக்கிறது" என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விரைவில் வெளியேறும் என்றும், அந்தக் கூட்டணி தேர்தல் நேரத்தில் சிதறிவிடும் என்றும் அவர் ஆரூடம் கூறியுள்ளார்.
தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) குறித்துப் பேசிய பழனிசாமி, இது ஊழியர்களை ஏமாற்றும் ஒரு நாடகம் என்று சாடினார். "பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது மத்திய அரசின் திட்டத்தை நகலெடுத்து ஒரு புதிய நாடகத்தை முதல்வர் அரங்கேற்றியுள்ளார். இதை அரசு ஊழியர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்" என்றார். விவசாயிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டக் களத்தில் இருப்பதே இந்த ஆட்சியின் தோல்விக்குச் சான்று என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் மும்முனை மின்சாரம் போன்ற திட்டங்களை நினைவு கூர்ந்த அவர், தற்போது விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆக்ரோஷமான பேச்சு அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. "உழைப்பாளர் கட்சியான அதிமுக, மக்களின் ஆதரவோடு மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும்" என்ற அவரது பேச்சால் தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
Tags
Tamil Nadu