வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்காவால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லண்டன் மாநகரின் அடியில் உள்ள 'Bank of England' வங்கியின் பாதாள அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தங்கத்தின் கதி என்ன என்ற கேள்வி உலக அரங்கில் எழுந்துள்ளது. சுமார் 31 டன் எடையுள்ள இந்தத் தங்கக் கட்டிகளின் (Gold Bullion) மதிப்பு, இன்றைய சந்தை விலையில் 1.95 பில்லியன் டாலர்களுக்கும் மேல் (சுமார் 1.4 பில்லியன் பவுண்டுகள்) இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் 15% பங்கைக் கொண்டுள்ள இந்தத் தங்கம், கடந்த சில ஆண்டுகளாகவே லண்டன் நீதிமன்றங்களில் ஒரு பெரிய 'Geopolitical' சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
இந்தத் தங்கப் போர் 2018-லேயே ஆரம்பித்துவிட்டது. அந்த ஆண்டு நடந்த வெனிசுலா தேர்தலில் மதுரோவின் வெற்றியைப் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா அங்கீகரிக்க மறுத்ததால், அங்கிருந்து தங்கம் தாயகம் திரும்புவது (Repatriation) தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த பொருளாதாரத் தடைகள் (US Sanctions) மற்றும் பிரிட்டன் வெளியுறவுத் துறையின் நேரடி அழுத்தம் காரணமாக, 'Bank of England' இந்தத் தங்கத்தை விடுவிக்க மறுத்துவிட்டது. "இந்தத் தங்கத்தைக் கொடுத்தால் மதுரோவின் சர்வாதிகார அரசாங்கம் அதைத் திருடிவிடும் அல்லது தவறாகப் பயன்படுத்திவிடும்" என்பதுதான் அப்போதைய எதிர்க்கட்சிகளின் வாதமாக இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே மதுரோவின் அரசாங்கம் லண்டன் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து, "எங்கள் நாட்டு மக்களுக்குத் தங்கம் தேவை" என்று வாதிட்டது. ஆனால், பிரிட்டன் அரசாங்கம் மதுரோவை அதிகாரப்பூர்வ தலைவராக அங்கீகரிக்காததால், அந்தத் தங்கம் தொடர்ந்து முடக்கப்பட்டது. மதுரோவின் ஆதரவாளர்கள் இதனை "Blatant Piracy" (பகிரங்கமான கடல் கொள்ளை) என்று கடுமையாகச் சாடினார்கள். தற்போது மதுரோ கைது செய்யப்பட்ட பிறகும், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் யுவெட் கூப்பர் (Yvette Cooper) நாடாளுமன்றத்தில் பேசுகையில், "வெனிசுலாவில் ஜனநாயகம் திரும்பும் வரையிலான அழுத்தமாக (Transition to Democracy) இது தொடரும்" எனத் தெரிவித்து, தங்கத்தை இப்போதைக்குத் தர முடியாது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்.
தனிப்பட்ட ஒரு நாட்டின் சொத்தை (Sovereign Reserves) இப்படி அரசியல் காரணங்களுக்காக முடக்குவது, தற்போது உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் சொத்துக்களும் முடக்கப்பட்டதால், பல நாடுகள் தாங்கள் வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ள தங்கத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்து வருகின்றன. ட்ரம்ப் போன்ற தலைவர்களின் திடீர் முடிவுகளால் 'Rules-based Global Order' மீது நாடுகளுக்கு நம்பிக்கை குறைந்து வருவதால், தங்கத்தின் விலை உலகளவில் கடுமையாக உயர இதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. லண்டன் வங்கியின் இந்த மௌனம், வெனிசுலாவுக்குப் புதிய விடியல் பிறக்குமா அல்லது தங்கம் அங்கேயே முடங்கிக் கிடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
