தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம், அவரது அரசியல் வாழ்வின் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இப்படம் தணிக்கைக் குழுவின் (CBFC) பிடியில் சிக்கி, வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி படத்திற்குச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட போதிலும், தணிக்கைக் குழு மேல்முறையீடு செய்து வரும் ஜனவரி 21-ம் தேதி வரை தடையுத்தரவு பெற்றுள்ளது. இந்த குறிப்பிட்ட தேதி ஏன் கேட்கப்பட்டது என்பதில் மர்மம் நீடிக்கும் நிலையில், வேண்டுமென்றே படம் முடக்கப்படுகிறதா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் வலுத்துள்ளது.
திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த முட்டுக்கட்டை ஒருபுறமிருக்க, கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய 'தேர்தல் சின்னம்' விவகாரமும் தற்போது இழுபறியில் உள்ளது. தவெக தரப்பில் 'விசில்' உள்ளிட்ட சில சின்னங்கள் கோரப்பட்டதாகத் தகவல்கள் பரவினாலும், தேர்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தச் சின்னத்தையும் ஒதுக்கவில்லை. 'ஜன நாயகன்' படத்திற்குத் தணிக்கைக் குழு முட்டுக்கட்டை போடுவதைப் போலவே, தேர்தல் ஆணையமும் தவெக-வின் சின்னம் கோரும் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதில் காலதாமதம் செய்யுமோ என்ற அச்சம் கட்சித் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
இந்தச் சவால்களைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தவெக-வின் சட்ட வல்லுநர்கள் குழு தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பட விவகாரம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் சின்னம் பெறுவதற்கான நடைமுறைகள் என இரண்டையும் துரிதப்படுத்த அவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை அழுத்தமாகப் பதிய வைக்கவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. 'ஜன நாயகன்' படத்தின் தலைவிதிக்கும் கட்சியின் சின்னத்திற்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டம், வரவிருக்கும் 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
