
ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: நடிகர் ஜெயராம் வீட்டில் அதிரடி விசாரணை! சாட்சியாக மாறுகிறாரா பிரபல நட்சத்திரம்?
சபரிமலை சந்நிதானத்தில் உள்ள கருவறை கதவுகள் மற்றும் 'துவாரபாலகர்' சிலைகளுக்குத் தங்க முலாம் பூசுவதில் சுமார் 45 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகார், தென்னிந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்திக்கும், நடிகர் ஜெயராமுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து கேரளா சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சென்னையில் உள்ள ஜெயராமின் இல்லத்தில் வைத்து பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். 2019-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வே இந்த விசாரணைக்கு முக்கியத் தூண்டுகோலாக அமைந்துள்ளது.
விசாரணையில், சபரிமலை கோயிலுக்காகத் தயார் செய்யப்பட்ட தங்கத் தகடுகள் மற்றும் சிலைகள், கோயிலுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகச் சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. கோயிலுக்குச் சொந்தமான புனிதமான பொருட்களைத் தனியார் இல்லங்களுக்குக் கொண்டு சென்றது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுவதால், இது குறித்து ஜெயராமிடம் அதிகாரிகள் விளக்கம் கோரினர்.
இந்த விவகாரம் குறித்துப் பதிலளித்துள்ள நடிகர் ஜெயராம், "நான் கடந்த 50 ஆண்டுகளாகத் தீவிர ஐயப்ப பக்தனாக இருக்கிறேன். உன்னிகிருஷ்ணன் போத்தியை ஒரு பக்தராகவே எனக்குத் தெரியும். சபரிமலை கருவறைக்காகச் செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்துப் பூஜை செய்தால் ஐயப்பனின் அருள் கிடைக்கும், வளம் பெருகும் என்று அவர் கூறியதை நம்பியே பூஜைக்கு அனுமதி அளித்தேன். இதில் ஏதேனும் முறைகேடு நடக்கும் என்றோ, அவர் மோசடிப் பேர்வழி என்றோ எனக்குத் தெரியாது" என்று தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தங்கத் திருட்டு வழக்கில் இதுவரை தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் உட்பட 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாகத் திருடப்பட்ட தங்கம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதா என்பது குறித்து அமலாக்கத்துறையும் (ED) தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நடிகர் ஜெயராமுக்கும் முறைகேடுகளுக்கும் நேரடி நிதித் தொடர்பு எதுவும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தாலும், தங்கம் எங்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதற்கான முக்கியச் சாட்சியாக அவரைச் சேர்க்கப் புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்காகக் கேரளா உயர்நீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது. இதனால் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள கேரளா போலீசார், நடிகர் ஜெயராமின் வாக்குமூலத்தைக் கொண்டு வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தத் திட்டமிட்டுள்ளனர். புனிதமான சபரிமலை விவகாரத்தில் ஒரு முன்னணி நடிகர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது திரையுலகிலும், பக்தர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.