ஈரானில் நடைபெற்று வரும் அரசு எதிர்ப்புப் போராட்டங்களைப் பயன்படுத்தி, அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சவுதி அரேபியா, ஓமன் மற்றும் கத்தார் ஆகிய முக்கிய வளைகுடா நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அமெரிக்கா இத்தகைய அதிரடி முடிவுகளைக் கைவிட வேண்டும் என இந்த நாடுகள் ரகசியமான முறையில் தூதரக ரீதியாக அழுத்தம் கொடுத்து வருவதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நாடுகள் போர் நடவடிக்கையை எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணமாக 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) பாதுகாப்பைக் குறிப்பிடுகின்றன. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த குறுகிய கடல் வழியாகவே நடைபெறுகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி நடவடிக்கையாக ஈரான் இந்த ஜலசந்தியை முடக்க வாய்ப்புள்ளது. இது உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் விலை உயர்வையும், பொருளாதாரச் சரிவையும் ஏற்படுத்தும் என வளைகுடா நாடுகள் அஞ்சுகின்றன.
ஈரானிய ஆட்சியாளர்கள் மீது வளைகுடா நாடுகளுக்குப் பெரிய அளவில் நன்மதிப்பு இல்லாவிட்டாலும், ஈரானில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அவை கருதுகின்றன. தற்போதைய அரசு கவிழ்க்கப்பட்டால், அதிக தீவிரப்போக்கு கொண்ட 'இஸ்லாமிய புரட்சிகர காவல்படை' (IRGC) அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடும் அல்லது நாடு முழுவதும் கலவரங்கள் வெடிக்கலாம் என சவுதி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, ஈரானுடனான மோதலில் தாங்கள் பங்கேற்கப்போவதில்லை என்றும், அமெரிக்கப் படைகள் தாக்குதலுக்குத் தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் சவுதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மறுபுறம், ஈரானியப் போராட்டக்காரர்களுக்குத் தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக ஆதரவு தெரிவித்து வரும் அதிபர் ட்ரம்ப், "உதவி வரப்போகிறது" எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு ஈரானில் 'வண்ணப் புரட்சி'யை (Color Revolution) தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே ஈரானின் தற்போதைய சமூக நெருக்கடிக்குக் காரணம் என்று ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டையும் ஈரான் தற்போது கோரியுள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
