சிங்கப்பூர் அரசியலில் திருப்பம் : பிரீத்தம் சிங்கிற்கு விழுந்த பலத்த அடி!



சிங்கப்பூர் நாடாளுமன்றக் குழுவிடம் பொய் உரைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற தொழிலாளர் கட்சியின் (Workers' Party) பொதுச் செயலாளர் பிரீத்தம் சிங்கின் 'எதிர்க்கட்சித் தலைவர்' தகுதியை பிரதமர் லாரன்ஸ் வோங் ரத்து செய்துள்ளார்.  நாடளுமன்றத்தில் நடந்த மூன்று மணி நேர அனல் பறக்கும் விவாதத்திற்குப் பிறகு, 49 வயதான பிரீத்தம் சிங் இந்தப் பதவிக்கு "தகுதியற்றவர்" என ஆளும் கட்சி உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து  இந்த அதிரடி உத்தரவைப் பிரதமர் பிறப்பித்தார்.

"பிரீத்தம் சிங்கின் மீதான குற்றவியல் தண்டனைகள் மற்றும் அவர் தகுதியற்றவர் என்ற நாடாளுமன்றத்தின் ஒருமித்த கருத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர் எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பது இனி சாத்தியமில்லை என முடிவு செய்துள்ளேன்," என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் நேர்மையைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார். இருப்பினும், பிரீத்தம் சிங் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ஆம் ஆண்டு நாடாளுமன்றக் குழுவிடம் சாட்சியம் அளித்தபோது, ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாகத் தனது கட்சி உறுப்பினர் ஒருவருக்குத் தவறான ஆலோசனை வழங்கியதாக பிரீத்தம் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடும் தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரமே தற்போது அவரது பதவியைப் பறிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

சிங்கப்பூரில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் செயல் கட்சி (PAP) ஆட்சியில் இருந்து வரும் நிலையில், பிரீத்தம் சிங் ஒரு வலிமையான எதிர்க்கட்சித் தலைவராகப் பார்க்கப்பட்டார். 2020 தேர்தலில் அவரது கட்சி 10 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்ததைத் தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். தற்போது அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதால், மற்றொரு தகுதியான உறுப்பினரைப் பரிந்துரைக்குமாறு தொழிலாளர் கட்சிக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொழிலாளர் கட்சியின் மற்ற முக்கிய உறுப்பினர்களான சில்வியா லிம் மற்றும் பைசல் மனாப் ஆகியோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், "என் மனசாட்சி எப்போதும் தெளிவாகவே உள்ளது, சட்டத்தின் முடிவை நான் மதிக்கிறேன்" என பிரீத்தம் சிங் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் அரசியலில் ஒரு முக்கியத் தலைவரின் பதவி பறிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post