மின்னசோட்டாவில் துப்பாக்கியுடன் வீதிக்கு வந்த போராட்டக்காரர்கள்: ட்ரம்ப் பயந்து பின்வாங்குகிறாரா?


 

மின்னசோட்டாவில் 37 வயதான செவிலியர் அலெக்ஸ் ப்ரெட்டி, கூட்டாட்சி முகவர்களால் (ICE) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவை போர்க்களமாக மாற்றியுள்ளது. தற்போது மினியாபோலிஸ் வீதிகளில் போராட்டக்காரர்கள் ராணுவ உடையில், கையில் பெரிய ரக துப்பாக்கிகளுடன் களமிறங்கியுள்ளனர். 'FU**CK-  ICE' என்ற வாசகம் பொறித்த தொப்பிகளை அணிந்துகொண்டு, அலெக்ஸ் கொல்லப்பட்ட இடத்தை ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பாதுகாத்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த ஆயுதம் ஏந்திய எழுச்சியால் அமெரிக்க காவல்துறை செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

நிலைமை மோசமடைவதைக் கண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முதல்முறையாக தனது பிடிவாதமான போக்கிலிருந்து பின்வாங்குவதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளார். மினியாபோலிஸ் நகரில் இருந்து கூட்டாட்சி முகவர்களை (Federal Agents) திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னலில்' தெரிவித்துள்ளார். "அவர்கள் தங்களின் வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர், ஒரு கட்டத்தில் நாங்கள் அங்கிருந்து வெளியேறுவோம்" என்று ட்ரம்ப் கூறியிருப்பது, மக்களின் போராட்டத்திற்குப் பணிந்து அவர் எடுக்கும் முடிவாகவே பார்க்கப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் கிறிஸ்டி நோம் (Kristi Noem) பேசுகையில், அலெக்ஸ் ப்ரெட்டி அதிகாரிகளை நோக்கித் துப்பாக்கியைக் காட்டியதால் தற்காப்பிற்காகச் சுட்டதாகக் கூறினார். ஆனால், அங்குள்ள வீடியோ ஆதாரங்கள் அதிகாரிகள் முதலில் அலெக்ஸை நிராயுதபாணியாக்கி (Disarm), அதன் பின்னரே பலமுறை சுட்டதைக் காட்டுகின்றன. இது 'தற்காப்பு' அல்ல, திட்டமிட்ட 'படுகொலை' என்று போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக முழக்கமிட்டு வருகின்றனர்.

நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய நகரங்களிலும் "அலெக்ஸிற்கு நீதி வேண்டும்" என்ற கோஷம் எதிரொலிக்கிறது. கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன் கிரெனேட்கள் மூலம் கூட்டத்தை கலைக்க அதிகாரிகள் முயற்சி செய்தாலும், மக்களின் வேகம் குறையவில்லை. ரெனீ குட் (Renee Good) என்ற மற்றொரு குடிமகன் சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட காயமே இன்னும் ஆறாத நிலையில், அலெக்ஸின் மரணம் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post