"ஒரு பக்கம் வலுவான கூட்டணியாக இருக்கிறோம்" என்று அதிமுக மேலோட்டமாகக் கூறி வந்தாலும், அக்கட்சியின் அடித்தளம் தற்போது ஆட்டம் கண்டுள்ளதா என்ற பலமான கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முதன்மைக் காரணம், எடப்பாடி பழனிசாமியின் அதீத 'ஈகோ' அரசியல் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கட்சி சிதைந்தாலும் பரவாயில்லை, தன்னை எதிர்த்து எவர் கேள்வி கேட்டாலும் அவர்களை உடனடியாகக் கட்டம் கட்டி நீக்கிவிடும் போக்கு அதிமுகவில் ஜனநாயகத்தை முழுமையாக அழித்துவிட்டது. இதன் எதிரொலியாகவே, கட்சியின் மூத்த தூணாகக் கருதப்பட்ட செங்கோட்டையன் போன்ற ஜாம்பவான்கள் தற்போது அதிமுகவை விட்டு விலகி, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பக்கம் சாய்ந்துள்ளனர்.
இந்தத் திடீர் மாற்றத்தால் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் தற்போது TVK-வின் கை ஓங்கியுள்ளது. ஏற்கனவே பல மாவட்டச் செயலாளர்கள் மறைமுகமாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நேற்று புதுக்கோட்டையின் 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், விஜய் முன்னிலையில் தன்னை தவெக-வில் இணைத்துக் கொண்டார். ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் அசைக்க முடியாத செல்வாக்கு கொண்ட கு.ப.கிருஷ்ணனின் இந்த விலகல், அதிமுகவின் தென்மண்டலக் கட்டமைப்பிற்கு விழுந்த பேரிடியாகக் கருதப்படுகிறது.
வலுவான தொண்டர் படை, கட்டமைப்பு மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களைப் படிப்படியாக இழந்து வரும் அதிமுக, வெறும் பாஜகவின் நிழலை மட்டும் நம்பி எப்படித் தமிழ்நாட்டில் களம் இறங்க முடியும்? சமீபத்தில் நடத்தப்பட்ட ரகசிய சர்வேக்களின்படி, பல மாவட்டங்களில் அதிமுக 3-ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், வரவிருக்கும் தேர்தலில் TVK தலைவர் விஜய், அதிமுகவை அடித்துத் துவம்சம் செய்துவிடுவார் என்பதில் ஐயமில்லை. மேலும், "விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்" என்ற பரப்புரை அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் மிகப்பெரிய ஓட்டையைப் போட்டுள்ளது.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நேற்று முன்தினம் (ஜனவரி 25) வரை விஜய் எப்படியும் தங்கள் கூட்டணியில் இணைந்துவிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி பகல் கனவு கண்டு கொண்டிருந்ததுதான். அதனால்தான் இதுவரை விஜய்யை அவர் நேரடியாகத் தாக்கவில்லை. ஆனால், மாமல்லபுரம் கூட்டத்தில் அதிமுகவை "ஊழல் சக்தி" என்று விஜய் வெளுத்து வாங்கிய பிறகுதான், எடப்பாடியாருக்கு உண்மை நிலை உறைக்கத் தொடங்கியுள்ளது. மொத்தத்தில், 2026 தேர்தல் களம் அதிமுகவிற்கு ஒரு மிகப்பெரிய வாழ்வா-சாவா போராட்டமாக மாறியுள்ளது!
