பிரிட்டன் அரசு, அகதிகளை நட்சத்திர விடுதிகளில் தங்க வைப்பதற்குப் பதிலாக ராணுவ முகாம்களுக்கு மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை வேளையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 27 அகதிகள் அடங்கிய முதல் குழு கிழக்கு சசெக்ஸில் உள்ள குரோபரோ (Crowborough) ராணுவப் பயிற்சி முகாமிற்குள் அழைத்து வரப்பட்டனர். உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, நள்ளிரவின் மறைவில் இந்த இடமாற்றம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத், "விடுதிகளில் அகதிகளைத் தங்குவதற்கு ஒரு நாளைக்குச் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. இதனைத் தவிர்க்கவே ராணுவ முகாம்கள் பயன்படுத்தப்படுகின்றன" என்று விளக்கமளித்துள்ளார். இருப்பினும், குரோபரோ முகாமில் மட்டும் சுமார் 500 ஆண்களைத் தங்க வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது அந்தச் சிறிய நகரத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனப் புகார் தெரிவித்துள்ள மக்கள், கடந்த ஆறு வாரங்களாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்காக ஒரு சட்டப் போராட்டக் குழு (Crowborough Shield) அமைக்கப்பட்டு, சுமார் ₹1 கோடி (£100,000) நிதி திரட்டப்பட்டுள்ளது.
