GO BACK

கிரிக்கெட் களத்தில் வெடித்த 'பனிப்போர்': மவுனம் கலைத்த இலங்கை.


கிரிக்கெட் களத்தில் வெடித்த 'பனிப்போர்': வங்கதேசத்தை தட்டித்தூக்கிய ஐசிசி! மவுனம் கலைத்த இலங்கை - அடுத்த அதிரடி என்ன?

2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாகவே கிரிக்கெட் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்திய மண்ணில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மறுப்பு தெரிவித்ததும், அதற்குப் பதிலாக அவர்களைத் தொடரிலிருந்தே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நீக்கியதும் உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுநாள் வரை அமைதி காத்து வந்த இலங்கை கிரிக்கெட் வாரியம், தற்போது தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவித்து மவுனத்தைக் கலைத்துள்ளது.

இந்த சர்ச்சையின் பின்னணியில் ஐபிஎல் விவகாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடவிருந்த வங்கதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமானை பிசிசிஐ விடுவித்ததைத் தொடர்ந்து, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தங்களது போட்டிகளை மட்டும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேசம் அடம்பிடித்தது. ஆனால், பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகிய இரு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்து, 24 மணிநேரக் கெடு விதித்தன. அந்த நேரத்திற்குள் வங்கதேசம் பதில் அளிக்காததால், அதிரடியாக அந்த அணி நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.

இதுவரை இந்த விவகாரத்தில் கருத்து கூறாமல் இருந்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பந்துல திஸாநாயக்க தற்போது பேசுகையில், "இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுமே எங்களுக்கு நெருங்கிய நட்பு நாடுகள். பிராந்திய ரீதியான மோதல்களில் சிக்கிக் கொள்ள விரும்பாததாலேயே நாங்கள் இதுவரை அமைதி காத்தோம். இந்த விவகாரத்தில் நாங்கள் நடுநிலை வகிக்கவே விரும்புகிறோம்," எனத் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான மோதலில் தான் ஒருதலைப்பட்சமாகச் செயல்படவில்லை என்பதை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், வருங்காலங்களில் இது போன்ற அரசியல் அல்லது பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படும்போது, எந்தவொரு நாட்டிற்கும் நடுநிலையான இடமாக (Neutral Venue) போட்டிகளை நடத்த இலங்கை தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் அணி தனது உலகக்கோப்பை லீக் போட்டிகளை இலங்கையில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்திற்கும் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐசிசி-யின் கடுமையான முடிவால் அது சாத்தியமில்லாமல் போனது. தற்போது இலங்கை தனது எல்லைக்குள் நடக்கும் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, வரும் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஹை-வோல்டேஜ் போட்டிக்கு இலங்கை அரசு 'உயர்மட்ட முன்னுரிமை' (Highest Priority) அளித்துள்ளது. அரசியல் பதற்றங்கள் விளையாட்டுக்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்யப் போவதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். வங்கதேசம் வெளியேற்றப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்து அணியின் வருகையுடன் புதிய உற்சாகத்துடன் உலகக்கோப்பையை நடத்த இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்கள் கைகோர்த்துள்ளன.