சுவிட்சர்லாந்தின் டிசினோ (Ticino) பகுதியில் வசித்து வந்த 40 வயது இலங்கைத் தமிழ் பெண்ணை, அவரது கணவரும் மற்றும் கணவரின் சகோதரரும் இணைந்து திட்டமிட்டுப் படுகொலை செய்த கொடூரச் சம்பவத்தில் நீதிமன்றம் தற்போது அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. (மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருக்கு என்ற சந்தேகம்)
கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், மனைவியை மூச்சுத்திணறச் செய்து கொன்ற கணவனுக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த சகோதரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சுவிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் உறங்கிக் கொண்டிருந்தபோது, கணவரின் சகோதரன் அவரது கால்களை அழுத்திப் பிடிக்க, கணவன் அந்தப் பெண்ணின் தலையில் பிளாஸ்டிக் பையை மாட்டி சுமார் 10 நிமிடங்கள் மூச்சுத்திணறச் செய்து கொன்றுள்ளார்.
பின்னர் இது இயற்கையான மரணம் என்று உலகை நம்ப வைப்பதற்காக, உடலைச் சரிசெய்து கட்டிலில் கிடத்திவிட்டு, இருவரும் நாடகமாடியதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், கொலையை மறைக்கத் தனது மகளையே கருவியாகக் கணவன் பயன்படுத்தியுள்ளார். பள்ளியிலிருந்து வந்த மகளிடம், "அம்மா தூங்குகிறார், போய் எழுப்பிச் சாப்பிடு" என்று கூறி உள்ளே அனுப்பியுள்ளார்.
தாய் அசைவற்று கிடப்பதைக் கண்டு அந்தச் சிறுமி அலறிய பிறகு, ஏதும் அறியாதவர் போல் மருத்துவர்களுக்கும் காவல்துறைக்கும் தந்தை தகவல் கொடுத்துள்ளார். ஆனால், காவல்துறையின் தீவிர விசாரணையில் இந்தத் திட்டமிட்ட கொலை அம்பலமானது. தற்போது குற்றவாளிகள் இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
