தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி எந்தப் பக்கம் சாயப்போகிறது என்ற சஸ்பென்ஸ் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பல ஆண்டுகளாக நீடிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தற்போது விரிசல் விழுந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாளை டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில், திமுக கூட்டணியிலிருந்து விலகி விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்துடன்' (TVK) கைகோர்க்க காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பு நிர்வாகிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, "ஆட்சியில் பங்கு" என்ற விஜய்யின் அதிரடி அறிவிப்பு, நீண்ட காலமாகக் காங்கிரஸ் தலைவர்கள் மனதில் இருந்த அதிகார ஆசையைத் தூண்டியுள்ளது. இதனால் திமுக மீதுள்ள அதிருப்தியைச் சில தலைவர்கள் இப்போதே வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனர்.
சமீபத்தில் மும்பை உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த படுதோல்வி, டெல்லி மேலிடத்தை நிலை குலையச் செய்துள்ளது. இதே போன்ற நிலை தமிழகத்திலும் ஏற்பட்டால், மாநிலத்தில் கட்சியின் இருப்புக்கே ஆபத்தாகிவிடும் என ராகுல் காந்தி கருதுகிறார். இதனால், வெறும் தொகுதிப் பங்கீடு மட்டுமின்றி, கட்சியின் எதிர்காலத்தைக் காப்பாற்றக் கூடிய ஒரு பலமான கூட்டணியைத் தேர்ந்தெடுக்க அவர் நேரடியாகக் களமிறங்கியுள்ளார்.
நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லி விரைந்துள்ளார். திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக இருந்தால் எத்தனை தொகுதிகளைக் கேட்பது, அல்லது புதிய கூட்டணியில் இணைந்தால் கிடைக்கக்கூடிய அரசியல் லாபங்கள் என்ன என்பது குறித்து இந்த ரகசியக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. ராகுல் காந்தியின் சிக்னலுக்காக ஒட்டுமொத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும் காத்திருக்கின்றனர்.
விஜய்யின் தவெக ஒரு பக்கம் காங்கிரஸுக்கு வலை வீசும் நிலையில், மறுபுறம் திமுக தனது பழைய கூட்டணிக் கூட்டாளியைத் தக்கவைக்க முயற்சி செய்து வருகிறது. இதனால் நாளை டெல்லியில் எடுக்கப்படப்போகும் முடிவு, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சமன்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. "கை" சின்னம் யாருடன் இணையப்போகிறது என்பது நாளை மாலைக்குள் தெரிந்துவிடும்!
