எலான் மஸ்க்கு ஆசியாவில் விழுந்த முதல் அடி : ஆபாசப் புகாரால் அதிரடி நடவடிக்கை!



எலான் மஸ்க்கின் X AI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'Grok' செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள், ஆபாசமான 'டீப்ஃபேக்' (Deepfake) புகைப்படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்தோனேசியா அந்தச் செயலிக்குத் தற்காலிகத் தடையை விதித்துள்ளது. இதன் மூலம், உலகிலேயே மஸ்க்கின் இந்த AI கருவியைத் தடை செய்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடு என்ற பெயரை இந்தோனேசியா பெற்றுள்ளது. சாதாரண புகைப்படங்களைக்கூட ஆபாசமான சித்திரங்களாக மாற்றும் வசதியை Grok அனுமதிப்பதாகப் பல நாடுகளும் கவலை தெரிவித்து வந்த நிலையில், இந்தோனேசியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தோனேசியா, ஆபாசமான உள்ளடக்கங்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சர் மெட்டியா ஹபீத் கூறுகையில், "அனுமதியின்றி உருவாக்கப்படும் இத்தகைய ஆபாசப் படங்கள் மனித உரிமைகளுக்கும், குடிமக்களின் பாதுகாப்புக்கும் எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது ஒரு வகையான 'டிஜிட்டல் வன்முறை' என்றும் அவர் சாடியுள்ளார். X தளம் தனது AI பாதுகாப்பை பலப்படுத்தும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிகிறது.

இந்த விவகாரம் இந்தோனேசியாவோடு மட்டும் நின்றுவிடாமல், ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. Grok செயலியின் மூலம் நூற்றுக்கணக்கான பெண்களின் புகைப்படங்கள் சிதைக்கப்பட்டு ஆபாசமாக மாற்றப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதேபோல், ஐரோப்பிய ஆணையம் Grok தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 2026 இறுதி வரை பாதுகாத்து வைக்குமாறு X நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனிலும் இந்தச் செயலிக்குத் தடை விதிப்பது குறித்து அந்நாட்டுப் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆலோசித்து வருகிறார்.

எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் 2025 ஜூலை மாதம் வெளியிட்ட 'Grok 4' பதிப்பில் போதிய பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதே இந்த விவாதங்களுக்கு முக்கியக் காரணமாகும். தீவிரவாதக் கருத்துகள் மற்றும் அரசியல் பாகுபாடுகளைத் தாண்டி, தற்போது சிறுவர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் வசதி இதில் இருப்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூகப் பொறுப்பின்றி செயல்படும் இத்தகைய தொழில்நுட்பக் கருவிகள் எதிர்காலத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post