GO BACK

மேலும் கிடுக்கிப்பிடி போட்ட தணிக்கை குழு- விஜய்யின் கடைசி படத்திற்கு மீண்டும் ஒரு சோதனை !

 

படக்குழுவினர் தங்களை அணுகினால் தங்களது வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனத் தணிக்கை வாரியம் (CBFC) உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' (Caveat) மனுவைத்  இன்று(30) தாக்கல் செய்து பெரிய வெடி குண்டு ஒன்றை தூக்கிப் போட்டுள்ளது. நேற்றைய தினம் தான், படக்குழுவினர் சென்று சமாதானம் பேசினார்கள். நாங்கள் கேஸை வாபஸ் வாங்குகிறோம் என்று உறுதிமொழி கொடுத்தார்கள். ஏனால் அது எதுவுமே பலிக்கவில்லை. இந்த ஜன நயாகனை எப்படி என்றாலும் வெளியே விடக் கூடாது என்பதில் தணிக்கை குழு மிக மிக கவனமாக இருக்கிறது. 

தளபதி விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கும் முன் நடிக்கும் கடைசித் திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரித்துள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், படத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் காட்சிகள் இருப்பதாகவும், பாதுகாப்புப் படைகளின் சின்னங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் வந்த புகார்களால், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு, அவசரமாகச் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு உடனடியாக 'யு/ஏ' (U/A) சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தணிக்கை வாரியத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், தணிக்கை வாரியம் இந்த உத்தரவை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழு உச்ச நீதிமன்றம் சென்ற போதிலும், "மீண்டும் உயர் நீதிமன்றத்தையே அணுகுங்கள்" என்று கூறி உச்ச நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதில், தனி நீதிபதி பி.டி. ஆஷா பிறப்பித்த 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், தணிக்கை வாரியம் தனது வாதங்களை முன்வைக்கப் போதிய அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

தற்போது, உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தைச் சந்திக்கப் படக்குழு ஆலோசித்து வருகிறது. அதே சமயம், படக்குழுவினர் தங்களை அணுகினால் தங்களது வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனத் தணிக்கை வாரியம் (CBFC) உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' (Caveat) மனுவைத் தாக்கல் செய்துள்ளது. 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தெளிவான முடிவு எப்போது கிடைக்கும் என்பதே ரசிகர்களின் தற்போதைய பெரிய கவலையாக உள்ளது.