ரஜினி - கமல் இணையும் பிரம்மாண்ட படத்தை இயக்கப்போவது யார்? இன்று அறிவிப்பு


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' மற்றும் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' ஆகிய படங்களில் படுவேகமாக நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து ரஜினியின் 173-வது படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ரஜினிகாந்துக்கு சுந்தர் சி சொன்ன கதை பிடிக்காததாலும், அவர் ஏற்கனவே இயக்கிய ஒரு கதையின் சாயலில் இருந்ததாலும், தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து சுந்தர் சி இந்தத் திட்டத்திலிருந்து விலகிவிட்டார்.

சுந்தர் சி விலகியதைத் தொடர்ந்து, 'தலைவர் 173' படத்தை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்காக சிபி சக்கரவர்த்தி, 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் 'டிராகன்' அஸ்வத் மாரிமுத்து போன்ற இளம் இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டார். சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் புதுமையான சிந்தனைகளுக்கு ரஜினி முக்கியத்துவம் அளித்து வருவதால், இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் ஒருவரே இறுதி செய்யப்படுவார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது.

ரஜினிகாந்தின் இந்தப் புதிய மெகா ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  இன்று காலை 11 மணிக்கு வெளியிட ராஜ்கமல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இதுகுறித்த ஒரு 'ட்வீட்' ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் ரஜினி இணையும் பட்சத்தில், அது ஒரு பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Post a Comment

Previous Post Next Post