2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ‘பாக்ஸ் ஆபீஸ்’ மோதல் உருவாகியுள்ளது. தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' ஜனவரி 9-ஆம் தேதியும், சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' ஜனவரி 10-ஆம் தேதியும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகின்றன. அரசியலில் முழுமையாகக் களம் காணும் விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசிப் படம் என்பதால் இதற்கு இமாலய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேவேளையில், சுதா கொங்கரா இயக்கத்தில் மொழிப் போராட்டப் பின்னணியில்
உருவாகியுள்ள 'பராசக்தி' படமும் ரசிகர்களிடையே பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. இந்தத் தேதிகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து சமூக வலைதளங்களில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே கடும் விவாதங்களும் மோதல்களும் நிலவி வந்தன.
இந்தச் சூழலில், 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இந்தப் போட்டி எதனால் உருவானது என்பது குறித்து மிகவும் வெளிப்படையாகவும் உருக்கமாகவும் விளக்கமளித்தார். முதலில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகவிருந்த படம், தயாரிப்பு ரீதியான காரணங்களால் ஜனவரி 10-க்கு மாற்றப்பட்டதாகக் கூறினார். ஏப்ரல்-மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் வரவுள்ளதால், படத்திற்கான வியாபாரக் கணக்குகளையும் முதலீட்டையும் தள்ளிப்போட முடியாது எனத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிவித்தார். படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றத் தான் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், தவிர்க்க முடியாமல் இந்த மோதல் நேர்ந்துள்ளதாக அவர் விளக்கினார்.
"பெரிய நடிகரின் படத்துடன் மோதுவது சரியானதா?" என்று தயங்கிய சிவகார்த்திகேயன், இது குறித்து நேரடியாக விஜய் தரப்பிடம் பேசியுள்ளார். விஜய்யின் மேலாளர் ஜெகதீஷிடம், "இது விஜய் அண்ணாவின் கடைசிப் படம், இதனால் அவருக்கு எந்த சங்கடமும் வந்துவிடக்கூடாது; அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுச் சொல்லுங்கள்" எனத் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்த விஜய், "இதில் என்ன இருக்கிறது.. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்" என்று பெருந்தன்மையுடன் பச்சைக்கொடி காட்டியுள்ளார். அண்ணன் எனத் தான் மதிக்கிற ஒருவரிடம் ஆசி பெற்ற பிறகே, துணிச்சலாகத் தனது படத்தையும் களம் இறக்கத் தயாரானதாக சிவகார்த்திகேயன் கூறினார்.
இறுதியில் வன்மத்தைப் பரப்புபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, "இது அண்ணன் - தம்பி பொங்கல்" என்று நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டார். "33 ஆண்டுகளாக நம்மை மகிழ்வித்த ஒரு மகத்தான கலைஞரின் கடைசிப் படத்தை நாம் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்; அதே சமயம் உழைப்பை நம்பி வரும் பராசக்திக்கும் ஆதரவு தாருங்கள்" என வேண்டுகோள் விடுத்தார். ஒரு சிலர் திட்டமிட்டுப் பரப்பும் வன்மத்தைக் கண்டு ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்றும், ஆரோக்கியமான போட்டியை மட்டுமே தாம் விரும்புவதாகவும் அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
