50 கோடி ஆண்டு கால மர்மம் விலகியது - விசித்திர உயிரினத்தின் வேட்டை ரகசியம் அம்பலம் !
தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜாவியர் ஒர்டேகா-ஹெர்னாண்டஸ், கனடாவில் கண்டெடுக்கப்பட்ட 1970-களின் பழைய படிமங்களை மீண்டும் ஆய்வு செய்தபோது ஒரு திடுக்கிடும் உண்மையைக் கண்டறிந்துள்ளார். அதில் ஒரு 'கோம் ஜெல்லி' (Comb Jelly) எனப்படும் ஜெல்லி மீன் போன்ற உயிரினத்தின் இறந்த உடலைச் சுற்றி, ஏழு ஹாலுசிஜீனியா உயிரினங்கள் மொய்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதன் மூலம், இவை கடலின் ஆழமான பகுதிகளில் இறந்து கிடக்கும் உயிரினங்களை உண்டு வாழும் 'துப்புரவாளர்களாக' (Scavengers) இருந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு ஒரு கால இயந்திரம் போல, 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்த ஒரு 'விருந்து' நிகழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. கடலின் ஆழமான பகுதிகளில் உணவு கிடைப்பது மிகவும் அரிது என்பதால், மேலிருந்து கடலடியில் விழும் ஜெல்லி மீன் போன்ற மென்மையான உடல்களை இந்த ஹாலுசிஜீனியாக்கள் தங்களது உறிஞ்சும் வாய் மூலம் (Suction feeding) வேகமாக உண்டு உயிர் பிழைத்திருக்கலாம் என விஞ்ஞானி அலிசன் டேலி விளக்குகிறார்.
இருப்பினும், இந்த ஆய்வை அனைத்து விஞ்ஞானிகளும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஜீன்-பெர்னார்ட் கரோன் போன்ற வல்லுநர்கள், இவை ஒன்றாகக் கிடப்பதால் மட்டுமே ஒன்றை ஒன்று சாப்பிட்டன என்று சொல்ல முடியாது என்றும், கடலடியில் ஏற்பட்ட மண் சரிவினால் இவை ஒரே இடத்தில் தள்ளப்பட்டிருக்கலாம் என்றும் மாற்றுக்கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படியோ, இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் ஒன்றான ஹாலுசிஜீனியா, இப்போதும் விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

No comments: