வானிலிருந்து பாயும் தோட்டாக்கள்! சீனாவின் துல்லியமான 'ரைபிள்' ட்ரோன்: அமெரிக்காவையே அதிரவைத்த அதிநவீன போர் வியூகம்!
உலக நாடுகளிடையே ட்ரோன் (UAV) தொழில்நுட்பத்தில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், சீனா ஒரு படி மேலே சென்று துப்பாக்கி ஏந்திய ட்ரோனை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. வுஹான் கைடு இன்ஃப்ராரெட் (Wuhan Guide Infrared) நிறுவனம் மற்றும் சீன ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை அகாடமி இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. சாதாரண ட்ரோன்களை விடவும், இது ராணுவத்தின் ஸ்டாண்டர்ட் ரைபிள்களைச் சுமந்து சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ட்ரோன் தரையிலிருந்து 10 மீட்டர் உயரத்தில் பறந்தபடி, 100 மீட்டர் தொலைவில் இருந்த மனித அளவிலான இலக்கைத் துல்லியமாகச் சுட்டு வீழ்த்தியது.
இந்த ட்ரோனின் சிறப்பம்சமே, இதற்காகத் தனியாகத் துப்பாக்கிகளை வடிவமைக்க வேண்டிய அவசியமில்லை. சீன ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் வழக்கமான அஸால்ட் ரைபிள்களையே (Assault Rifle) இதில் பொருத்திக் கொள்ள முடியும்.
இன்னொரு அதிரடி நடவடிக்கையாக, 'ஜியுடியான்' (Jiutian) எனப்படும் உலகின் மிகப்பெரிய 'ட்ரோன் தாய் கப்பலை' (Drone Mothership) சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவின் இந்த அசுர வேக ராணுவ வளர்ச்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாகத் தைவான் விவகாரத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இத்தகைய ஆளில்லா போர் கருவிகள் போரின் போக்கையே மாற்றக்கூடும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா தனது ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த போராடி வரும் வேளையில், சீனா ஒரே நேரத்தில் பல முனைத் தாக்குதல் நடத்தும் 'சுவர்ம்' (Swarm) தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கிறது.
