மதுராந்தகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ. (NDA) கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக ஆவேசமாக உரையாற்றினார். அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் என முக்கியத் தலைவர்கள் அணிவகுத்த இந்த மேடையில், "இந்தத் தேர்தல் திமுகவின் இறுதி தேர்தல்" என ஈபிஎஸ் முழங்கியது, திரண்டிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 'தீயசக்தி' திமுகவை அடியோடு வீழ்த்த பிரதமர் மோடி நமக்குத் துணையாக நிற்கிறார் என்று அவர் சூளுரைத்தார்.
திமுக ஆட்சியைக் கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களுக்குத் துயரங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
"ஒரு குடும்பம் மட்டும் வாழ்வதற்காக 8 கோடி மக்களைச் சுரண்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?" என்று கேள்வி எழுப்பிய அவர், கருணாநிதி குடும்பம் தமிழகத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாக மிகக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். உரிய நேரத்தில், உரியவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால் வெற்றி என்பது தங்களுக்கு உறுதி என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
குறிப்பாக, பிரதமர் மோடி தமிழக மண்ணில் கால் வைத்தவுடன் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டதாக ஈபிஎஸ் குறிப்பிட்டது, திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தை மறைமுகமாகத் தாக்கும் 'மாஸ்' பில்டப்பாகப் பார்க்கப்பட்டது.
எதிர்ப்பாளர்களை வீழ்த்த இதுவே சரியான தருணம் என்றும், தீய சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்றும் அவர் தனது பேச்சை நிறைவு செய்தார். சமீபகாலமாக அரசியல் களத்தில் அதிரடி காட்டி வரும் விஜய் பாணியிலேயே, ஈபிஎஸ்ஸும் 'சரியான இடம், சரியான நேரம்' எனப் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
