GO BACK

வைத்தார்கள் பெரிய ஆப்பு ! தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை வெளியிட்டுக் கூடாது -

 

தமிழக சட்டசபை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இத்தகைய இலவச வாக்குறுதிகளுக்குத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தேர்தலுக்கு முன் அறிவிக்கப்படும் இலவசங்களால் மாநில அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதாகவும், இது பொருளாதாரச் சமநிலையைப் பாதிப்பதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் ஒரு திட்டத்தை அறிவிக்கும் போது, அதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து பெறப்படும் மற்றும் அதனால் ஏற்படப்போகும் நிதிசார் பாதிப்புகள் என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தி, இத்தகைய அறிவிப்புகளைத் தடுக்க மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. 

இலவசத் திட்டங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி ஆயோக் நிபுணர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும் என்பதும் இந்த மனுவின் முக்கியக் கோரிக்கையாகும்.

தமிழகத்தில் ஏற்கனவே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு இலவசத் திட்டங்கள் அமலில் உள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தலில் கட்சிகள் அறிவிக்கவுள்ள புதிய இலவசங்கள் மீது இந்த வழக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே இதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த மனுவும் இணைக்கப்பட்டு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கலாம்.