
"அப்பா நல்லவர் இல்ல.. பைபிள்ல காசு இருக்கு!" - சென்னையில் உருக்கமான கடிதம் எழுதிவைத்து தாய் தற்கொலை; பின்னணியில் அதிர்ச்சி!
சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகரில், மூன்று பெண் குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பூஜா என்ற 30 வயதுப் பெண், தனது 12 ஆண்டுகால திருமண வாழ்க்கையைத் துயரமான முடிவோடு முடித்துக்கொண்டார். கணவரின் மதுப்பழக்கமே இந்த விபரீத முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வரும் ரவிக்குமார், நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து பூஜாவோடு தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்ற பூஜாவை, ரவிக்குமார் சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்துள்ளார். ஆனால், மீண்டும் மதுபோதையில் ஏற்பட்ட மோதலே பூஜாவின் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் மதுபோதையில் வந்த ரவிக்குமார் பூஜாவோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பூஜா, தனது மூன்று பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வருந்தி ஒரு உருக்கமான கடிதத்தை எழுதிவைத்துள்ளார். அதில், "அப்பா நல்லவர் அல்ல, அவரை நம்பாதீர்கள். பைபிளில் பணம் வைத்துள்ளேன், அதைப் பாதுகாப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்று எழுதிவிட்டு, தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மூன்று பெண் குழந்தைகளும், தங்கள் தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறித் துடித்த காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பூஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தில் பூஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரவிக்குமார் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பூஜா தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவளது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ரவிக்குமார் தனது மகளை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடுவதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags
Tamil Nadu