பிரிட்டனின் அழிவு காலம் ஆரம்பமா? வீதியில் படகில் செல்லும் மக்கள் - இன்சூரன்ஸ் மறுப்பு!
செல்வச் செழிப்போடு இதுவரை இருந்து வந்த பிரிட்டனில், பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்குப் பின்னதாக, பிரித்தானிய அரசு வங்குரோத்து நிலைக்குச் சென்று, மீண்டும் சற்று எழுந்து நிற்கும் இந்தத் தருணத்தில், தற்போது காலநிலை இடையே புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டது. கரையோரப் பகுதிகள், தாழ்வான பகுதிகள், கடற்கரையை அண்டியுள்ள பகுதிகளில் எல்லாம் சிறிதாக மழை பெய்தாலே வெள்ளம் தேங்க ஆரம்பித்துவிடுகிறது. அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், பிரித்தானியாவில் நீங்கள் சில இடங்களில் வீடு வாங்கினால், எந்த ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியும் உங்கள் வீட்டை இன்சூரன்ஸ் செய்ய மாட்டார்கள். மறுப்பு தெரிவிப்பார்கள்.
வீடுகள் தொடக்கம் கார்கள் என்று அனைத்து உடமைகளையும் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அந்த இடத்தில் உள்ள மக்கள் துன்பங்களை அனுபவிப்பது ஒருபுறம் இருக்க, இது ஏனைய அனைத்து மக்களையும் நாடு தழுவிய ரீதியில் பாதிக்கிறது. காரணம், பிரித்தானியாவில் சாதாரணமாகவே ஒரு சிறிய வீட்டின் விலை 2 லட்சம் பவுண்டுகள் (சுமார் 2 கோடி ரூபாய்) வருகிறது. இந்த நிலையில், தற்போது பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதால், அவற்றைத் திருப்பிப் புனரமைக்கப் பல மில்லியன் பவுண்டுகளை இன்சூரன்ஸ் (காப்புறுதி) நிறுவனங்கள் மக்களுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
இதனூடாக இந்தக் காப்புறுதி நிறுவனங்கள் அடையும் நஷ்டத்தை ஈடுகட்ட, அவர்கள் அந்தச் செலவு செய்த தொகையை ஏனைய மக்கள் மீது விதிப்பார்கள். அதாவது, திடீரென உங்கள் காப்புறுதித் திட்டத்தின் விலை கூடும் அல்லது புதுப்பிக்கும்போது விலை அதிகரிக்கும். இதுபோல வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதிகள் என்று அனைத்துமே உயரும் அபாயம் தோன்றியுள்ளது. அதுபோக கவுன்சில் டாக்ஸ் (வீட்டு வரி) தொடக்கம் பல கட்டணங்கள் உயர உள்ளன.
ஏற்கனவே 100 ரூபாய்க்கு 20% அதாவது 20 ரூபாய் டாக்ஸ் என்று பொருட்களில் வரியை வெட்டும் பிரித்தானிய அரசு, சம்பளமாக ஊழியர் பெறும் பணத்திலும் 20% விகிதத்தை வரியாக வெட்டி எடுக்கிறது. பின்னர் ஒவ்வொரு வீட்டிற்கும் வீட்டு வரி, கார் வைத்திருந்தால் அந்த கார் சாலையில் செல்ல ரோட் டாக்ஸ், வீட்டில் தொலைக்காட்சி இருந்தால் டிவி லைசன்ஸ் என்று பல வரிகளைப் போட்டு மக்களைப் படாத பாடு படுத்திவரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஏற்படும் நஷ்டத்தைக் கூட இந்தத் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் இறுதியாக மக்கள் தலையில்தான் கட்டுவது வழக்கம்.
பிரித்தானியாவில் இனி வாழ முடியாது என்று நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்தவர்கள் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் என 2024-2025 கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. பிரித்தானியாவைப் பொறுத்தவரை சுயதொழில் செய்யும் நபர்கள் மேலும் மேலும் வளர்ந்து பெரும் செல்வந்தர்களாக மாறி வருகிறார்கள். ஆனால், கூலி வேலை செய்பவர்கள் மட்டும் வரிகளைக் கட்டியே மாண்டு போகிறார்கள். இதுவே பிரித்தானியாவின் தற்போதைய களநிலை...

No comments: