"ஆயுசு நூறு" என்று நம் ஊரில் பெரியவர்கள் வாழ்த்துவார்கள். அந்த நீண்ட ஆயுளைப் பெற நாம் என்னவெல்லாம் செய்கிறோம்? கடுமையான பத்தியம், மணிக்கணக்கில் உடற்பயிற்சி எனப் படாதபாடு படுகிறோம். ஆனால், கோபன்ஹேகன் பல்கலைக்கழக (University of Copenhagen) விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வு நம் தலையில் இடியை இறக்கியுள்ளது. நாம் எவ்வளவு காலம் உயிர் வாழ்வோம்
என்பதைத் தீர்மானிப்பதில் நமது வாழ்க்கை முறையை விட, நமது மரபணுக்களுக்கே (Genetics) அதிகப் பங்கு இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். "நீ என்னதான் ஓடி ஓடி உடற்பயிற்சி செய்தாலும், உன் ஆயுள் உன் ஜீன்களில் தான் இருக்கு" என்பது போல இந்த ஆய்வு அமைந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில், ஒரு மனிதனின் ஆயுட்காலத்தில் மரபணுக்களின் பங்கு வெறும் 10 முதல் 30 சதவீதம் மட்டுமே என்று கருதப்பட்டது. மீதமுள்ள காலம் நாம் சாப்பிடும் உணவு, உடற்பயிற்சி மற்றும் விபத்துகளால் தீர்மானிக்கப்படுவதாக நம்பப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய ஆய்வில், ஒரு மனிதனின் ஆயுளைத் தீர்மானிப்பதில் மரபணுக்களின் பங்களிப்பு சுமார் 55 சதவீதம் (55 Percent) வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் தாத்தா, பாட்டி நீண்ட காலம் வாழ்ந்திருந்தால், நீங்களும் நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்பு பாதிக்கு மேல் உறுதி செய்யப்பட்டுவிட்டது!
இந்த ஆய்வை மேற்கொண்ட டேனிலா பகுலா மற்றும் மோர்டன் ஷைபி-நட்சன் (Morten Scheibye-Knudsen) ஆகிய விஞ்ஞானிகள், "ஆயுட்காலம் என்பது பெரும்பாலும் மரபணுக்களால் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது என்றால், வாழ்க்கை முறை மாற்றங்களால் வயதாவதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்" என்று கூறுகின்றனர். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்களுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும், இதுதான் எதார்த்தம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சுருக்கமாகச் சொன்னால், உங்கள் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் (Lifestyle Interventions) உங்கள் ஆயுளை ஒரு சில ஆண்டுகள் கூட்டவோ குறைக்கவோ செய்யுமே தவிர, பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதே இந்த ஆய்வின் சாரம்சம்.அப்படியானால் ஜிம்முக்கும், டயட்டுக்கும் டாட்டா காட்டிவிடலாமா? என்றால் வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள். மரபணுக்கள் உங்கள் ஆயுளின் எல்லையை (Lifespan) தீர்மானித்தாலும்,
அந்த வாழ்நாளை நோயின்றி மகிழ்ச்சியாகக் கழிக்க ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் அவசியம். "விதி பாதி, மதி பாதி" என்பது போல, 55 சதவீதம் மரபணுக்கள் கையில் இருந்தாலும், மீதமுள்ள 45 சதவீதம் நம் கையில் தான் இருக்கிறது. எது எப்படியோ, இந்த ஆய்வு "Biohacker" என்று தங்களை அழைத்துக்கொண்டு பல மருந்துகளைச் சாப்பிடுபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் நிஜம்.
