சீனாவின் சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் உள்ள கோக்டோகே என்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில், ஸ்கீயிங் விளையாடிவிட்டுத் தனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவருக்குப் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. வழியில் ஒரு அழகான பனிச்சிறுத்தையைப் (Snow Leopard) பார்த்த அந்தப் பெண், அதன் அருகில் சென்று புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் எச்சரித்தும் அதைக் கேட்காமல், சுமார் 10 நிமிடங்கள் அந்த விலங்கை நோக்கி மெல்ல மெல்ல நெருங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பனிச்சிறுத்தை, மின்னல் வேகத்தில் அவர் மீது பாய்ந்து முகத்தையும் தலையையும் கடித்துக் குதறியது. (VIDEO)
அந்தப் பெண் அணிந்திருந்த கனமான 'ஸ்கீயிங் ஹெல்மெட்' (Ski Helmet) அவரது உயிரைக் காக்கும் கவசமாக மாறியது. இல்லையெனில், சிறுத்தையின் கூரிய பற்கள் அவரது மண்டை ஓட்டைத் துளைத்திருக்கும். சிறுத்தை தாக்கியதில் அந்தப் பெண் மயக்கமடைந்து ரத்த வெள்ளத்தில் பனியில் சரிந்து கிடந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள் அலறினர். அப்போது அங்கிருந்த ஒரு ஸ்கீயிங் பயிற்சியாளர், தனது கையில் இருந்த குச்சிகளை வீசி அந்தப் பனிச்சிறுத்தையை அங்கிருந்து விரட்டியடித்தார். ரத்தக் கறையுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்த அங்கிருந்தவர்கள், அவர் இறந்துவிட்டாரோ என்று அஞ்சினர்.
உடனடியாக அவர் அருகில் இருந்த ஃபுயுன் கவுண்டி (Fuyun County) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வரலாற்றிலேயே பனிச்சிறுத்தை மனிதர்களைத் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாகப் பதிவுகள் இல்லை என்றாலும், இந்தப் பெண்ணின் முட்டாள்தனமான 'செல்ஃபி' முயற்சி ஒரு மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பனிச்சிறுத்தைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை, ஆனால் உணவைத் தேடி அவை ஊருக்குள் வரும்போது மக்கள் அவற்றுக்குத் தொந்தரவு தரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "வனவிலங்குகளைப் பார்த்தால் தள்ளி நின்று ரசியுங்கள், அவற்றின் அருகே சென்று புகைப்படங்கள் எடுக்க முயற்சிக்காதீர்கள்" என்று சுற்றுலாப் பயணிகளுக்குச் சீனா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போதைக்கு அந்தப் பெண் சிகிச்சையில் இருந்தாலும், அவரது முகம் மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்கள் ஆற நீண்ட காலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
