
இலங்கைக்கு எதிராகக் களம் இறங்கும் இலங்கை வீரர்! அமெரிக்க அணியில் ஷெஹான் ஜெயசூர்யா அதிரடி சேர்ப்பு! டி20 உலகக்கோப்பை பரபரப்பு!
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அமெரிக்க அணியை மொனாங்க் படேல் தலைமையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயமாக, இலங்கை அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடிய ஆல்-ரவுண்டர் ஷெஹான் ஜெயசூர்யா அமெரிக்க அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2021-ல் இலங்கை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவிற்குப் குடிபெயர்ந்த இவர், தற்போது அதே நாட்டிற்காக உலகக்கோப்பையில் விளையாடத் தயாராகி வருகிறார்.
ஷெஹான் ஜெயசூர்யா மட்டுமல்லாது, இந்த அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இந்தியாவின் மும்பை அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிய சுபம் ரஞ்சனே (Shubham Ranjane) மற்றும் பாகிஸ்தானின் பெஷாவரில் பிறந்த லெக் ஸ்பின்னர் முகமது மொஹ்சின் (Mohammad Mohsin) ஆகிய இருவரும் முதன்முறையாக அமெரிக்க டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுபம் ரஞ்சனே ஏற்கனவே அமெரிக்காவிற்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், டி20 சர்வதேச போட்டிகளில் இதுவே அவருக்கு அறிமுகமாகும்.
அமெரிக்க அணி குரூப்-ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அமெரிக்க அணி தனது முதல் லீக் போட்டியில் பிப்ரவரி 7-ம் தேதி மும்பையில் இந்தியாவைச் சந்திக்கிறது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10-ம் தேதி கொழும்பில் பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. தனது சொந்த மண்ணான இலங்கையிலேயே, மற்றொரு நாட்டிற்காக ஷெஹான் ஜெயசூர்யா களம் இறங்குவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 15 பேர் கொண்ட அணியில், 2024 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணியில் இருந்த 10 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். சௌரப் நேத்ராவால்கர், ஆண்ட்ரிஸ் கவுஸ் மற்றும் அலி கான் போன்ற முக்கிய வீரர்கள் அணியின் பலமாக உள்ளனர். இருப்பினும், சூதாட்டப் புகாரில் சிக்கி இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நட்சத்திர வீரர் ஆரோன் ஜோன்ஸ் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை என்பது அமெரிக்க அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க அணியின் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் புபுது தசநாயக்க செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இலங்கை மண்ணில் தங்கிப் பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க அணி, அங்குள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது. 34 வயதான ஷெஹான் ஜெயசூர்யாவின் அனுபவம் மற்றும் சுழற்பந்து வீச்சு, ஆசிய ஆடுகளங்களில் அமெரிக்காவிற்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.