
மன்னிப்பு கேட்க மறுக்கும் டிரம்ப்: கொதித்தெழுந்த பிரிட்டன் பிரதமர் - ராணுவ வீரர்கள் தியாகம் அவமதிக்கப்பட்டதா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, 'பாக்ஸ் நியூஸ்' (Fox News) தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார். அதில், "ஆப்கானிஸ்தான் போரில் நேட்டோ நாடுகளின் உதவி அமெரிக்காவிற்குத் தேவையே இல்லை. அவர்கள் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிடவில்லை; சற்று தள்ளிப் பின்வரிசையிலேயே பாதுகாப்பாக நின்றார்கள்" என்று அதிரடியாகத் தெரிவித்தார். இந்த கருத்து, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று போரிட்ட நட்பு நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டிரம்பின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), இது "மிகவும் அவமானகரமானது மற்றும் அருவருப்பானது" என்று சாடியுள்ளார். ஆப்கானிஸ்தான் போரில் பிரிட்டன் தனது 457 வீரர்களைப் பலிகொடுத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் தியாகத்தை டிரம்ப் குறைத்து மதிப்பிடுவது போரில் வீரர்களை இழந்த குடும்பங்களுக்குப் பெரும் வலியை ஏற்படுத்தும் என்று கூறினார். இத்தகைய தவறான கருத்தைத் தெரிவித்ததற்காக டிரம்ப் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் போரில் இரண்டு முறை நேரடியாகப் பங்கேற்ற அனுபவம் கொண்ட ஹாரி, பிரிட்டன் வீரர்களின் தியாகம் உண்மையுடனும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். "நான் அங்கு பணியாற்றினேன், பல நண்பர்களை உருவாக்கினேன், பலரை இழந்தும் இருக்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பைச் சிறுமைப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டு வரலாற்று ரீதியாகவும் தவறானது என்று பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2001-ல் அமெரிக்காவில் 9/11 பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, நேட்டோ அமைப்பின் 5-வது சட்டப்பிரிவு (Article 5) வரலாற்றிலேயே முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. இதன்படி, அமெரிக்காவிற்கு ஆதரவாக பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்து ஆப்கானிஸ்தானில் கடும் போரிட்டன. இந்தப் போரில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக வீரர்களைப் பலிகொடுத்த நாடாக பிரிட்டன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில், டிரம்ப் தனது பிடிவாதமான போக்கைக் கைவிடாமல் கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் நாட்டை "நன்றி கெட்டது" என்று விமர்சிப்பது மற்றும் நேட்டோ நாடுகளுக்குத் தரும் பாதுகாப்பைக் குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இது நேட்டோ கூட்டமைப்பிற்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான பிரிட்டனே டிரம்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது, வரும் காலங்களில் சர்வதேச ராணுவக் கூட்டணியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
Tags
world news