தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்த முக்கியத் தலைவர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளனர். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் விஜய்யைச் சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைப்பில் குறிப்பாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பேத்தி மயூரி, வீரமங்கை வேலு நாச்சியாரின் குடும்ப உறுப்பினர் ஆகியோர் தவெக-வில் இணைந்தது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இவர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மூன்றாவது மகள் கேத்ரின், சமூக ஆர்வலர் அரங்கநாதனின் பேரன் ஆகியோரும் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும், ஓ.பி.எஸ்-ஸின் தீவிர ஆதரவாளராக இருந்தவரும், பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேலா ராமமூர்த்தியின் மகனுமான ராஜ் மோகன் உள்ளிட்டோரும் இன்று விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முக்கிய ஆளுமைகளின் வாரிசுகள் தவெக-வை நோக்கி வருவது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
