லண்டன்: பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டின் (Jeffrey Epstein) தொடர்பான மூன்று மில்லியன் ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவை பகடைக்காயாகப் பயன்படுத்தி, மறைந்த மகாராணி எலிசபெத்தையே தங்களுக்குச் சாதகமாக வளைக்க எப்ஸ்டின் மற்றும் ஹாலிவுட் புள்ளிகள் சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
ஆஸ்கார் விருதிற்காக அரச குடும்பத்தைப் பயன்படுத்திய ஹார்வி வெய்ன்ஸ்டீன்: பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் தயாரித்த 'தி கிங்ஸ் ஸ்பீச்' (The King's Speech) படத்திற்கு ஆஸ்கார் விருது வாங்கிக் கொடுக்க எப்ஸ்டின் உதவி கோரப்பட்டார். இந்தப் படம் இளவரசர் ஆண்ட்ரூவின் தாத்தாவான ஆறாம் ஜார்ஜ் மன்னரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தை ஆண்ட்ரூவை பார்க்க வைப்பதன் மூலம், அரச குடும்பத்தின் ஆதரவை பெற்று சர்வதேச அளவில் படத்திற்கான மதிப்பைக் கூட்ட ஹாலிவுட் மக்கள் தொடர்பு அதிகாரி பெக்கி சீகல் (Peggy Siegal) திட்டமிட்டார்.
மகாராணிக்கு ரகசியமாக கொடுக்கப்பட்ட டிவிடி: வெளியாகியுள்ள மின்னஞ்சல்களின்படி, பெக்கி சீகல் ஆண்ட்ரூவிடம் ஒரு டிவிடியை (DVD) ரகசியமாக வழங்கியுள்ளார். ஆண்ட்ரூ அதைத் தனது தாயான மகாராணி எலிசபெத்திடம் கொண்டு சேர்ப்பார் என்றும், மகாராணி அதைப் பார்த்தால் படத்திற்குப் பெரும் விளம்பரம் கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பினர். "ஆண்ட்ரூவை இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லுங்கள், இதில் அவரது தாத்தாவாக நடிக்கும் கொலின் ஃபிர்த் (Colin Firth) நிச்சயம் ஆஸ்கார் வெல்வார் என அவரிடம் சொல்லுங்கள்" என எப்ஸ்டினுக்கு பெக்கி அனுப்பிய மின்னஞ்சல் இப்போது உலகையே அதிர வைத்துள்ளது.
தொடரும் சர்ச்சைகள் - ஆண்ட்ரூவிற்கு நெருக்கடி: ஏற்கனவே எப்ஸ்டின் உடனான தொடர்பால் தனது அரசுப் பதவிகளையும் கௌரவங்களையும் இழந்த இளவரசர் ஆண்ட்ரூவிற்கு, இந்த புதிய ஆவணங்கள் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு தயாரிப்பாளரின் வணிக நோக்கத்திற்காகத் தனது அதிகாரத்தையும், தனது தாயின் கௌரவத்தையும் பயன்படுத்த ஆண்ட்ரூ இடம் கொடுத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்ஸ்டின் மற்றும் வெய்ன்ஸ்டீன் ஆகிய இருவருமே பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
