தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தீவிர அரசியலில் குதித்த பிறகு முதல்முறையாக தேசிய ஊடகமான என்டிடிவி (NDTV) செய்தி நிறுவனத்திற்குப் பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில், தமிழக அரசியல் சூழல் மற்றும் தன் மீதான விமர்சனங்கள் குறித்து விஜய் மிகவும் வெளிப்படையாகவும், தீர்க்கமாகவும் பதிலளித்திருப்பதாக அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நேர்காணல் அரசியல் வட்டாரங்களில் தற்போதே பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் குறித்த கேள்விகளுக்கு விஜய் முதன்முறையாக மனம் திறந்து பதிலளித்துள்ளார். "அந்தச் சம்பவம் எனது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று; அது இப்போதும் என்னை நிழல் போலத் துரத்திக் கொண்டே இருக்கிறது" என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், கருணாநிதி போன்ற மூத்த தலைவர்கள் தனக்கு ஒரு வகையில் முன்மாதிரியாகச் செயல்பட்டிருப்பதாகவும் அவர் இந்த நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன் மீதான "மௌனம்" குறித்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள விஜய், "மௌனமாக இருப்பது என்பது இயலாமையோ அல்லது கோழைத்தனமோ அல்ல" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் அவர் மீது வைக்கும் தொடர் குற்றச்சாட்டுகளுக்குத் தனது பாணியில் நேர்மையான விளக்கங்களை அளித்துள்ள அவர், மக்கள் நலனுக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தனது தொலைநோக்குப் பார்வையை இந்தப் பேட்டியில் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
விஜய்யின் இந்த அதிரடி நேர்காணலைக் கண்ட என்டிடிவி குழுவினர், இதுவரை தாங்கள் சந்தித்த பல மாநில அரசியல் தலைவர்களிடமிருந்து விஜய்யிடம் ஒரு தனித்துவமான வித்தியாசத்தை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். மிகவும் தீர்க்கமாகவும், நேர்மையாகவும், அதே சமயம் காட்டமாகவும் அவர் அளித்த பதில்கள் வரும் நாட்களில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் முழுமையாக ஒளிபரப்பாக உள்ள இந்த நேர்காணலுக்காகத் தமிழக மக்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
