விசாரணையின் போது, தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது என்றும், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் இடையே விதிகளில் வித்தியாசம் இருப்பது இயல்பானதுதான்" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், ஒரு கட்சி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், அரசின் பொதுவான பாதுகாப்பு விதிகளில் எப்படி உள்நோக்கம் கற்பிக்க முடியும் என்றும் வினவியது.
தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அரசு வெளியிட்டுள்ள புதிய விதிகள், குறிப்பாக 5,000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு அமைப்பாளர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்பதும், சில குறிப்பிட்ட இடங்களில் கூட்டங்களுக்குத் தடை விதிப்பதும் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயல்" என்று வாதிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படும் புதிய கட்சிகளின் குரலை ஒடுக்கவே இத்தகைய கடுமையான விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தவெக-வின் இந்த மனு குறித்துத் தமிழக அரசு மூன்று வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டே இத்தகைய விதிகள் வகுக்கப்படுவதாகத் தொடக்க நிலையில் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக மற்றும் தமிழக அரசு இடையிலான இந்த சட்டப் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
