அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளில் தனது போர் கப்பல்களைக் குவித்து வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி விடுத்துள்ள எச்சரிக்கை உலகையே போர்ப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானியப் புரட்சியின் ஆண்டு விழாவை முன்னிட்டு தெஹ்ரானில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய 86 வயதான காமேனி, "இந்த முறை நீங்கள் போரைத் தொடங்கினால், அது ஒரு பிராந்திய போராக (Regional War) மாறும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும்" என்று ஆவேசமாக முழங்கினார்.
ஈரானின் பரந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களைச் சுரண்டுவதற்காகவே அமெரிக்கா இத்தகைய மிரட்டல்களை விடுப்பதாகக் குற்றம் சாட்டிய காமேனி, சமீபத்தில் ஈரானில் வெடித்த மக்கள் போராட்டங்கள் ஒரு 'சதித் திட்டம்' என்று விமர்சித்தார். அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் மசூதிகள் தாக்கப்பட்டதை ஒரு "சதிப்புரட்சி முயற்சி" (Coup) என வர்ணித்த அவர், இந்தத் தீய செயல்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும், புனித நூலான குர்ஆனை எரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
மறுபுறம், காமேனியின் இந்த நேரடி மிரட்டலுக்குப் பதிலளித்த டொனால்ட் டிரம்ப், "அவர் அப்படித்தான் சொல்வார்; நாங்கள் ஈரானுடன் ஒரு உடன்படிக்கையை எட்ட விரும்புக்கிறோம், அப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், காமேனி சொன்னது சரியா இல்லையா என்பதை நாங்கள் களத்தில் பார்த்துக்கொள்வோம்" என்று சவால் விட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, ஈரானில் நடந்த போராட்டங்களில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த பதில் போருக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
ஈரானிய நாடாளுமன்றத்தில் தீவிரவாத ஆதரவு எம்.பி.க்கள் ராணுவ உடையில் "அமெரிக்காவிற்கு மரணம்" என்று முழக்கமிட்டு வரும் அதே வேளையில், ஈரானில் நிலவும் உள்நாட்டுப் பதற்றத்தைத் தணிக்க பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி அளிப்பது போன்ற அதிரடி மாற்றங்களை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிதியுதவியுடன் "பயங்கரவாதிகள்" தான் போராட்டக்காரர்களைக் கொன்றதாக ஈரான் குற்றம் சாட்டுவதால், இந்தப் போர் மேகம் எப்போது வேண்டுமானாலும் மழையாகப் பொழியலாம் என்ற பதற்றம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.
