Ads Top

அமெரிக்க ராணுவ தளத்தில் கை வரிசை காட்டிய 2 திருடர்கள்: 4 ட்ரோன்கள் களவாடப்பட்டது

 

அமெரிக்காவுக்கு உள்ளே ட்ரோன் தாக்குதல் ஒன்றை நடத்த ஈரான் திட்டமிட்டு இருந்த நிலையில், அதனை அமெரிக்க உளவுத்துறை முறியடித்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் உள்ள ராணுவ தளம் ஒன்றுக்குள் அத்துமீறி நுளைந்து 2 திருடர்கள், 4 ட்ரோன்களை களவாடிச் சென்றுள்ள விடையம், அமெரிக்க உளவுத்துறையை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இவர்கள் ஈரான் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்றும், 


இந்த ட்ரோன்களை பாவித்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அஞ்சுகிறது உளவுத்துறை. அமெரிக்காவின் கென்டக்கி மற்றும் டென்னசி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள 'ஃபோர்ட் காம்ப்பெல்' (Fort Campbell) ராணுவ தளத்திலிருந்து நான்கு அதிநவீன ட்ரோன்கள் திருடப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 21 முதல் 24-ம் தேதிக்குள் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்துப் புலனாய்வு செய்த ராணுவ அதிகாரிகள், தற்போது இரண்டு மர்ம நபர்களைக் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளனர். முகமூடி அணிந்திருந்த அந்த நபர்கள், ராணுவ தளத்திற்குள் இருந்த பொறியியல் பிரிவு கட்டிடத்திற்குள் நுழைந்து இந்தத் தாக்குதல் ரக ட்ரோன்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.


திருடப்பட்ட நான்கு ட்ரோன்களும் 'ஸ்கைடியோ எக்ஸ்-10-டி' (Skydio X10D) ரகத்தைச் சேர்ந்தவை. இவை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடியவை மற்றும் போர்க்களங்களில் உளவு பார்க்கவும், துல்லியமாகத் தாக்கவும் பயன்படுத்தப்படுபவை. இதன் மொத்த மதிப்பு 110,000 டாலர்களுக்கும் (சுமார் ₹91 லட்சம்) அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்ட நபர்கள் ஒரு செடான் கார் மற்றும் ஒரு பிக்கப் டிரக் மூலம் தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் குறித்த தகவல் அளிப்போருக்கு 5,000 டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.


மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தத் திருட்டுச் சம்பவம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்க மண்ணிலேயே ஈரானிய ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், ராணுவத்தின் ரகசியத் தளத்திலிருந்தே ட்ரோன்கள் திருடப்பட்டிருப்பது பெரும் பாதுகாப்பு ஓட்டையைக் காட்டுகிறது. இந்தத் திருட்டுத் திட்டமிட்ட ஒரு சதி என்றும், இதில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத் தளத்திற்குள் நுழைய ஏற்கனவே அனுமதி இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.