தங்களின் அடுத்த இலக்கை அறிவித்த ஈரான் : மக்கள் உடனடியாக வெளியேற அறிவித்தல் !

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஈரானின் கார்க் தீவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கியத் துறைமுகங்களை இலக்கு வைக்கப் போவதாக ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. தங்களது நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, அமீரகத்திலுள்ள துறைமுகங்களை மறைமுகமாகப் பயன்படுத்தி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

துபாயின் ஜெபெல் அலி துறைமுகம், அபுதாபியின் காலிபா துறைமுகம் மற்றும் புஜைரா துறைமுகம் ஆகியவற்றின் அருகில் வசிக்கும் மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு ஈரான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. வரும் சில மணி நேரங்களில் இந்தத் துறைமுகப் பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதால், தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது அமீரகத்தின் முக்கியத் துறைமுகங்கள் மீது ஈரான் பார்வை திரும்பியுள்ளது உலகப் பொருளாதாரத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் சூழலில், இந்த புதிய எச்சரிக்கை சர்வதேச அளவில் கவலையை அதிகரித்துள்ளது. தாக்குதலில் சிக்கியுள்ள பகுதிகளை மக்கள் தவிர்க்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் உள்ளூர் நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்த போர் சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் உட்படப் புலம்பெயர் மக்கள் தாயகம் திரும்ப முடியாமல் பெரும் தவிப்பில் உள்ளனர். வான்வெளிப் போக்குவரத்து முடங்கியுள்ளதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன.

Previous Post Next Post

Contact Form