Ads Top

ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்: மறுதணிக்கை குழுவின் ஆய்வு திடீர் மற்றம்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்', நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காமல் சிக்கலில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், தணிக்கை வாரியத்தின் பல்வேறு நிபந்தனைகள் மற்றும் சட்டப் போராட்டங்களால் முடங்கியுள்ளது. படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, தணிக்கை வாரியத்தின் மறுதணிக்கை குழுவின் (Revising Committee) ஆய்வுக்கு உட்படுத்த ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 9) மதியம் 2 மணிக்குத் திரைப்படத்தைப் பார்வையிட குழு திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், கடைசி நேரத்தில் தணிக்கை குழுவின் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இன்று நடைபெறவிருந்த திரையிடல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் மீண்டும் ஒரு தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. ஆய்விற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காட்சிகளில் சில மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக வந்த புகார்கள் மற்றும் ராணுவச் சின்னங்களை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள், விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு திரைப்படத்தைத் தாண்டி பொது விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், இப்படம் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து விஜய் சமீபத்தில் மறைமுகமாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள சூழலில், மறுதணிக்கை குழுவின் ஆய்வுக்குப் பிறகே படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்துத் தெளிவான முடிவு எடுக்கப்படும். இன்று நடைபெறவிருந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது, படம் ஏப்ரல் மாத சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வெளியாகுமா அல்லது தேர்தலுக்குப் பிறகுதான் வெளியாகும் என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளது. தணிக்கை சான்றிதழ் தொடர்பான இப்பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே, விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இப்படம் திரையரங்குகளுக்கு வரும்.

No comments:

Powered by Blogger.